டெல்லி: கட்சி நலன்களுக்கு அடிபணியாமல் கூட்டணி கட்சிகளுடன் ஒற்றுமையாக இருந்து சமூக நீதி, பெண்கள் முன்னேற்றம், விவசாயிகள் நலன் ஆகியவற்றுக்காக பாடுபடுங்கள் என்று சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசுக்கு ப. சிதம்பரம் அறிவுறுத்தி இருக்கிறார்.

உச்ச நீதிமன்றத்தின் கண்டிப்பான உத்தரவையடுத்து, பெரும்பான்மையை எதிர்கொள்ளாமல் மகாராஷ்டிரா முதலமைச்சர் பதவியில் இருந்து பட்னவிஸ் ராஜினாமா செய்தார். துணை முதலமைச்சர் அஜித் பவாரும் விலகினார். இதையடுத்து, சிவசேனா, என்சிபி, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்க இருந்த தடை நீங்கியது.

இன்னும் சில நாட்களில் மகாராஷ்டிராவின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்கிறார் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே. யாருக்கு என்ன பதவி, அமைச்சரவை பற்றி 3 கட்சிகளும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன.

இந் நிலையில் சிவசேனா தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு திகார் சிறையில் இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் வாழ்த்து கூறி இருக்கிறார். கூடவே சில அறிவுரைகளையும் வழங்கி இருக்கிறார்.

அவர் கூறி இருப்பதாவது: தனிப்பட்ட கட்சி நலன்களை முன் வைக்காமல், அவற்றுக்கு அடிபணிந்து செயல்படாமல் விவசாயிகளின் முன்னேற்றம், வேலைவாய்ப்பு, சமூக நீதி, குழந்தைகளின் நலன் ஆகியவற்றை முன்வைத்து ஒருங்கிணைந்து பணியாற்றுங்கள்.

கூட்டணி ஆட்சி தான் இந்தியாவின் சிறந்த அரசாங்கமாக இருக்க முடியும். நாடாளுமன்ற  ஜனநாயகத்தின் பரிணாமங்களை உணரும் மக்கள், மாறுபட்ட பன்முகத்தன்மை வாய்ந்த கூட்டணி கட்சிகளால் தான் நன்மை செய்ய முடியும் என்பதை ஒத்துக் கொள்வார்கள். குறைந்தபட்ச செயல் திட்டங்கள் மூலம் நிலைநிறுத்திக் கொள்ள முடியும் என்று கூறியிருக்கிறார்.