விமானத் தாக்குதல் பிரச்சாரம் – பாரதீய ஜனதாவை வாரிய ப.சிதம்பரம்

சென்னை: பாலகோட் விமானத் தாக்குதல், இந்தியாவின் வெற்றியை தீர்மானித்தால், உண்மையில் இந்த நாட்டின் பிரதமராகும் தகுதியுடையவர் இந்திய விமானப்படை தளபதிதான் என்று காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம், பாரதீய ஜனதாவை வாரியுள்ளார்.

நரேந்திர மோடி ஆட்சியமைத்ததிலிருந்து, சிதம்பரத்திற்கும் பாரதீய ஜனதாவிற்கும் ஏழாம் பொருத்தமாக உள்ளது.

ஒரு பேட்டியில் சிதம்பரம் கூறியுள்ளதாவது, “விமானப் படை தாக்குதலை முன்வைத்து, நாட்டில் நிலவும் வேலையில்லாத் திண்டாட்டம், விவசாய சீரழிவு போன்ற பிரச்சினைகளை மறந்துவிடலாகாது. நாட்டின் பொருளாதார சீரழிவை அலட்சியம் செய்துவிட முடியாது.

பாலகோட் தாக்குதல்தான் தேர்தல் வெற்றியை தீர்மானிக்குமென்றால், பிரதமர் பதவிக்கு தகுதியானவர் நம் நாட்டின் விமானப்படை தளபதிதான். விமானப்படை என்பது ஒட்டுமொத்த நாட்டிற்குமானது; அது பாரதீய ஜனதாவிற்கு சொந்தமானதல்ல.

தாக்குதல் நடைபெற்றவுடன், அதை முதலில் மரியாதை செய்து வரவேற்றவர்கள் நாங்கள்தான். அந்தப் பிரச்சினை அதோடு முடிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், பாரதீய ஜனதா கட்சியோ, அதை தேர்தல் பிரச்சாரமாக மாற்றுகிறது” என்று தாக்கியுள்ளார்.

– மதுரை மாயாண்டி

Leave a Reply

Your email address will not be published.