ப. சிதம்பரத்துக்கு ஜாமீன் கிடைக்குமா? நாளை வெளியாகிறது தீர்ப்பு

டெல்லி: கைது செய்யப்பட்டு 105 நாட்களாக சிறையில் இருக்கும் ப. சிதம்பரத்துக்கு ஜாமீன் கிடைக்குமா என்பது நாளை தெரிந்துவிடும்.

ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கில், ப. சிதம்பரம் கடந்த ஆக. 22ம் தேதி டெல்லியில் கைது செய்யப்பட்டார். அவர் மீது சிபிஐயும், அமலாக்கத்துறையும் தனித்தனியே வழக்குகள் பதிவு செய்துள்ளன.

ப.சிதம்பரம் தற்போது திகார் சிறையில் இருக்கிறார். 105 நாட்களாக அவர் சிறையில் இருந்து வருகிறார். ஜாமீன் கோரி அவர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட 5 மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன.

சிபிஐ தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் கிடைத்தாலும், அமலாக்கத்துறையின் வழக்கால் சிறையில் இருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டு இருக்கிறது. அமலாக்கத்துறைக்கு எதிரான வழக்கில் அவரின் ஜாமீன் மனு மீது நாளை தீர்ப்பளிக்கப்படுகிறது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பானுமதி, போபண்ணா, ஹிரிகேஷ் ராய் ஆகியோர் கொண்ட அமர்வு தீர்ப்பளிக்கிறது. எப்படியும் இந்த முறை ஜாமீன் கிடைத்துவிடும் என்று காங்கிரசும். ப.சி தரப்பும் உறுதியாக நம்புகிறது.