சிதம்பரம்: சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ மாணவர்களின் போராட்டக் களத்தில் எம்எல்ஏ தலைமையில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.

தமிழகத்தின் மற்ற அரசு மருத்துவ கல்லூரியில் வசூலிக்கும் கல்வி கட்டணத்தையே வசூலிக்க வலியுறுத்தி, கடலூர் மாவட்டம், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 45 நாட்களாக  1,300 மருத்துவ மாணவர்கள் தொடர்ந்து அறவழியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்._

பல்கலைக்கழக நிர்வாகமானது விடுதியில் மின்சாரம், குடிநீர், உணவு வினியோகம் என அனைத்தையும் தடை செய்துள்ளது. அதனால் பாதிப்படைந்த மாணவர்கள் தேசிய மனித உரிமை ஆணையம் மற்றும் தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந் நிலையில் சிதம்பரம் எம்எல்ஏ பாண்டியன் தலைமையில் பல்கலைகழக துணைவேந்தர் முருகேசன், பதிவாளர் ஞானதேவன், சிதம்பரம் டி.எஸ்.பி. லாமேக், மருத்துவக் கல்லூரி முதல்வர் மிஸ்ரா, கண்காணிப்பாளர் நிர்மலா உள்ளிட்டோர் போராட்டக் களத்தில் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்._

அப்போது பேசிய சிதம்பரம் எம்.எல்.ஏ. பாண்டியன், மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு வரும் ஜனவரி 27ம் தேதி சென்னையில் நடைபெறும் மணிமண்டபம் திறப்பு நிகழ்ச்சியில் முதல்வர் மற்றும் சுகாதார அமைச்சரை நேரில் சந்தித்து நல்ல முடிவு எடுப்பதாக உறுதியாகக் கூறினார். அதனால் மாணவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று அறிவுறுத்தினார்

ஆனால், மாணவர்கள் தரப்பினரோ,  நாங்கள் அமைதியான முறையில் இங்கே அமர்ந்து இருக்கிறோம் என்றும் மாணவ பிரதிநிதிகள் 5 பேர் மட்டும் சென்னையில் அமைச்சரைச் சந்தித்து நல்ல முடிவை அறிவித்தால் நாங்கள் நிரந்தரமாகப் போராட்டத்தை கைவிடுகிறோம் என்றனர். ஆனால் எம்.எல்.ஏ. போராட்டத்தை கைவிட்டால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு அழைத்து செல்வதாக கூறினார் அதனை மாணவர்கள் ஏற்கவில்லை. இதனால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.

இதனைத் தொடர்ந்து மீண்டும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந் நிலையில் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் மாநில துணைத்தலைவர் புலிகேசி, மாவட்ட செயலாளர் குலோத்துங்கன் உள்ளிட்ட நிர்வாகிகள் போராட்டக் களத்திற்கு நேரில் சென்று மாணவர்களைச் சந்தித்துப் பேசினர்.

பின்னர் அவர்கள் அரசு சரியான முடிவு எடுக்கவில்லை என்றால் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரியில் பணியாற்றும் 14,000 மருத்துவர்களும் ஒரு முடிவு எடுக்கும் சூழ்நிலை உருவாகும் என  கூறியுள்ளனர்.