பணமதிப்பிழப்பால் உள்நாட்டு உற்பத்தி குறையும் என்ற கணிப்பு உண்மையாகிவிட்டது…ப.சிதம்பரம்

சென்னை:

‘‘பணமதிப்பிழப்புக்கு பின்னர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 1.5 சதவீதம் குறையும் என்ற எனது கணிப்பு தற்போது உண்மையாகியுள்ளது. பணமதிப்பிழப்பு போன்ற துன்ப நிகழ்வுகள் எந்த நாட்டிற்கும் ஏற்படக் கூடாது’’ என்று சிதம்பரம் கூறினார்.

வாய்மையே வெல்லும் என்ற தனது நாளிதழ் கட்டுரைகள் அடங்கிய நூல் வெளியீட்டு விழாவில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மேலும் பேசுகையில், ‘‘21ம் நூற்றாண்டில் நாட்டின் பொருளாதாரத்தை பணமதிப்பிழப்பு சீரழித்துவிட்டது. பணமதிப்பிழப்பு அறிவிப்பால் உள்நாட்டு உற்பத்தி 1.5 சதவீதம் குறையும் என்று மறுநாளே நாடாளுமன்றத்தில் கூறினேன். இது தற்போது உண்மையாகிவிட்டது.

2015-&16ம் ஆண்டில் உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 8.2 சதவீதமாக இருந்தது. இது 2017&18ம் ஆண்டில் 6.7 சதவீதமாக குறைந்துள்ளது. அரசு துன்பத்தை ஏற்படுத்தக் கூடாது. அவ்வாறு செய்துவிட்டால் மக்கள் அதை கேள்வி கேட்க வேண்டும்.

நாட்டில் பாகுபாடை முடிவுக்கு கொண்டு வர அனைவரும் எழுத வேண்டும். பேச வேண்டும். ஜாதி பாகுபாடு மற்றும் அரசியல் முறைகேடுகளுக்கு முடிவு கட்டிவிட முடியும். பொருளாதார தவறுகள் அனைத்தும் அது குறித்தும் பேசுவதாலும், எழுதுவதாலும் மட்டுமே சரி செய்ய முடியும்’’ என்றார்.