சிதம்பரம் அவரது குடும்பத்திற்குத்தான் நிதி அமைச்சராக இருந்தார்! அமைச்சர் சி.வி.சண்முகம் கடும் தாக்கு

சென்னை:

முன்னாள் அமைச்சர், சிதம்பரம் அவரது குடும்பத்திற்கு நிதி அமைச்சராக  இருந்து, உலகம் முழுவதும் சொத்து சேர்த்திருக்கிற  மிகபெரிய மோசடி மனிதர் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கடுமையாக விமர்சித்தார்.

தமிழக சட்டஅமைச்சர்  சி.வி.சண்முகம் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு  காரசாரமாக பதில் அளித்தார்.

அவரிடம் செய்தியாளர்கள்,  ராஜீவ்கொலை வழக்கு கைதிகளான  ஏழு பேர் விடுதலையில் தமிழக அரசு அக்கறை காட்டவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகிறார்களே என்ற கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த அமைச்சர்,  ஏழு பேர் விடுதலையில் தமிழக அரசை குறை சொல்ல எந்தக் எதிர் கட்சிக்கும் அருகதை கிடையாது. 7 பேர் விடுதலையில் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி, முதலில் முயற்சி எடுத்தது அம்மாதான்.  ஆனால் இன்று எதிர்க்கட்சி வரிசையில் உட்கார்ந்து நீலிக்கண்ணீர் வடிப்பவர்கள் பற்றி எங்களுக்குக் கவலையில்லை. நல்ல எண்ணத்துடன் இந்த முடிவை எடுத்தோம்.அரசுக்கு என்ன அதிகாரம் உள்ளதோ அதை அனைத்தையும் பயன்படுத்தி,அமைச்சரவை கூட்டி, அதன் தீர்மானத்தை ஆளுநருக்கு அனுப்பியுள்ளோம்.ஆளுநர் இதுகுறித்து நல்ல முடிவு எடுப்பார் என்று நம்புகிறேன்.

சிதம்பரம் சிபிஐ காவலில் வைக்கப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு பதில் அளித்த சண்முகம்,  சிதம்பரம் 9 ஆண்டு காலம் நிதி அமைச்சராக இருந்தவர் என்று இன்றைக்கு அழகிரி பேசி வருகிறார். அவர் யாருக்காக நிதி அமைச்சராக இருந்தார். அவருக்கும், அவர் குடும்பத்திற்கும் நிதி அமைச்சராக இருந்து, உலகம் முழுவதும் சொத்து
சேர்த்திருக்கிற  மிகபெரிய மோசடி மனிதர்.

மேலும், காங்கிரஸ் ஆட்சியில் தமிழகத்தை சேர்ந்த ஒருவரைகூட ஆளுநராக நியமிக்கவில்லை. பாஜக என்ன செய்தது, என்ன செய்தது என்று கேட்கின்ற திராவிட கட்சிகளுக்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பினரைகூட தேர்வு செய்யாத தமிழகத்திலே  ஒரு நல்ல பெண் அரசியல்வாதியான தமிழிசை சவுந்திராஜனை தெலுங்கானவின் முதல் ஆளுநராக நியமித்து பாஜக பெருமை சேர்த்துள்ளது என்றார்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் தமிழில் வெளிவருவதில் மீண்டும் பிரச்சினை எழுந்துள்ளதே என்ற கேள்விக்கு,  ஏற்கனவே உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் 6 மொழிகளில் வெளியிடப்படும் என அறிவித்தனர். பின்னர் நமது கோரிக்கையை ஏற்று தமிழிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டு அதன் ஒரு கட்டமாகப் பரீட்சார்த்த முறையில்
அறிமுகப்படுத்தினார்கள்.  தற்போது உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் தமிழில் வெளிவர என்ன பிரச்சினை உள்ளது என்று கேட்டுள்ளோம். தற்போது தமிழில் மொழிப்பெயர்க்க அவர்களுக்கு என்ன பிரச்சினை உள்ளது என்பது எனக்குத்
தெரியவில்லை. தமிழில் மொழிபெயர்க்க அனைத்து உதவிகளையும் செய்ய தமிழக அரசு தயாராக இருப்பதாக முதல்வர் அறிவித்துள்ளார்.

தமிழ் மொழியில் தீர்ப்பு மொழிமாற்றம் செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்கும். முதல்வர்
அதற்கான அனைத்து நடவடிக்கையையும் எடுப்பதாகக் கூறியுள்ளார். அதேபோன்று உயர் நீதிமன்றத் தீர்ப்புகளும் தமிழில் வெளிவரும் என சட்டப்பேரவையில் நான் அறிவித்தேன். அதுகுறித்தும் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியைச் சந்தித்து கோரிக்கை வைத்தேன். அது பரிசீலனையில் இருப்பதாகச் சொன்னார்கள். கடந்த 28-ம் தேதி கடிதம் ஒன்று வந்தது. அதில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புகளையும் மொழி மாற்றம் செய்ய பரிசீலனை செய்வதாக உயர் நீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்திலும் தமிழில் மொழி மாற்றம் செய்ய மென்பொருள் உருவாக்குவதற்காகப் பணியும் நடைபெற்று
வருகிறது. அது முடிந்தவுடன் விரைவில் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் தமிழில் வெளிவரும் என உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கடிதம் எழுதியுள்ளார்.

இவ்வாறு அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.