சிதம்பரம் என்றைக்குமே தடம் மாறமாட்டார்: தமிழக காங்., தலைவர் கே.எஸ் அழகிரி

முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் என்றைக்கும் தடம் மாறமாட்டார் என தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.

டில்லியில் பிரதமர் மோடி சுதந்திர தினத்தின் போது தேசிய கொடியை ஏற்றி வைத்துவிட்டு, நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது, “குடிநீர் பற்றாக்குறை, காடுகள் அழிப்பு, வீடுகள் இன்மை, ஏழ்மை, வேலையின்மை, ஊட்டச்சத்து குறைபாடு போன்றவற்றுக்கு மக்கள்தொகை பெருக்கமே காரணம். எனவே குடும்பங்களை சிறிய அளவில் வடிவமைத்து கொள்வது தேச பக்தி சார்ந்த செயல். அடுத்தது பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து பூமி தாயை பாதுகாக்க வேண்டும். ரசாயன பொருட்களின் பயன்பாட்டை குறைக்க வேண்டும். கடைசியாக செல்வந்தர்கள் மீது மத்திய அரசு அதிக வரியை விதிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே செல்வத்தை உருவாக்குபவர்களை மதிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

இது குறித்து தனது பாராட்டுக்களை டுவிட்டர் மூலம் தெரிவித்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், “சிறிய குடும்பம் அமைத்தல், செல்வங்கள் உருவாக்குபவர்களை மதித்தல், பிளாஸ்டிக்குக்கு தடை உள்ளிட்ட மூன்று அறிவிப்புகளை நான் வரவேற்கிறேன்” என்று தெரிவித்திருந்தார். ப.சிதம்பரத்தின் இந்த கருத்துக்கு, அவரது கூட்டணி கட்சி தலைவர்களே எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். பல வருடங்களாக பிரதமர் மோடியை எதிர்த்து வந்த ப.சிதம்பரம், திடீரென அவரின் திட்டங்களை வரவேற்பது பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் கே.எஸ் அழகிரி, “ப. சிதம்பரம் என்றைக்கும் தடம் மாறமாட்டார்.எடுத்துக் கொண்ட கொள்கையில் உறுதியாக இருப்பார். மோடியை பாராட்டுவதாலேயே அவருக்கு ஆதரவாக மாறிவிடுவார் என எடுத்துக் கொள்ள முடியாது” என்று தெரிவித்தார்.