ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தை கைது செய்ய அக்.25 வரை தடை நீட்டிப்பு

டில்லி:

என்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை மேலும் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

கடந்த  2007ம் ஆண்டு ப.சிதம்பரம் மத்திய நிதி மந்திரியாக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ கடந்த ஆண்டு மே மாதம்  15ம் தேதி குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தது.  இதையடுத்து அமலாக்கத்துறையும் இந்த வழக்கின் நிதி மோசடி குறித்த அம்சங்களை விசாரித்து வருகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கைது நடவடிக்கையை தவிர்க்கும் வகையில்  சிதம்பரம் தரப்பு தரப்பில் டில்லி உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுமீதான விசாரணையில் ஏற்கனவே சிதம்பரத்தை கைது செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்,  வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி,   முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தை கைது செய்வதற்கான தடையை அக்., 25 வரை நீட்டித்து உத்தரவிட்டார்.