வேளாண் வருவாய்க்கு வரி விதிக்க மத்திய அரசு திட்டம்!!

டெல்லி:

‘‘வேளாண் வருவாய்க்கு வரி விதிக்க வேண்டும். இதற்கு ஏற்ப ஏழை மற்றும் பணக்கார விவசாயிகள் என்று மாநில அரசுகள் வேறுபடுத்த வேண்டும்’’ என்று மத்திய அரசின் முதன்மை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் கூறுகையில், ‘‘வேளாண் வருவாய்க்கு வரி விதிப்பதில் இருந்து மாநில அரசுகள் தங்களை காப்பாற்றிக் கொள்ள முடியாது. ஒரு மாநிலம் இதை செய்துவிட்டால் மற்ற 29 மாநிலங்களும் இதை அமல்படுத்திவிடும்.

இதற்கு ஏற்ப ஏழை மற்றும் பணக்கார விவசாயிகள் என முதலில் வேறுபடுத்த மாநில அரசுகள் முன்வர வேண்டும். குறிப்பாக விவசாயி என்று எடுத்துக் கொண்டால் ஏழை விவசாயிகளுக்காக தான் எல்லா திட்டங்களும் செயல்படுத்தப்படுகிறது என்று மக்கள் நினைத்துக் கொள்கிறார்கள்.

இந்த வேறுபாட்டை மேற்கொள்ள அரசியல் தடுக்கிறது. இதை பொருட்படுத்தாமல் பணக்காரர்களுக்கு எங்கிருந்து வருவாய் வருகிறதோ அது வரிவிதிப்புக்கு உட்பட்டது என்று அறிவித்துவிடலாம்’’ என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த வாரம் வேளாண் வருவாய்க்கு வரிவிதிக்கும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை என்று நிதியமைச்சர் அருண்ஜேட்லி தெரிவித்திருந்தார். ஆனால், வேளாண் வருவாய்க்கு வரி விதிக்க நிதி ஆயோக் முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியானது. நிதி ஆயோக் உறுப்பினர் பிபேக் தேப்ராய் வேளாண் வருவாய்க்கு வரி விதிக்கப்பட வேண்டும் என்று கூறியதை தொடர்ந்தே இந்த சர்ச்சை எழுந்துள்ளது.

You may have missed