தேர்தல் பிரச்சாரம் பற்றிய அரசியல் கட்சிகளின் ஆலோசனைகள்: வரவேற்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு

டெல்லி: கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரம் பற்றிய அரசியல் கட்சிகளின் ஆலோசனைகள் வரவேற்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே உள்ளது. மத்திய, மாநில அரசுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக உள்ளன.இந் நிலையில், அக்டோபரில் பீகாருக்கு சட்டசபை தேர்தல் நடக்கிறது. ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பாஜக, காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் தயாராகி வருகின்றன.

பீகார் தேர்தலில் 65 வயதை கடந்தவர்களுக்கு தபால் வாக்கு அளிக்கும் வசதியை நீட்டிக்க போவதில்லை என்று தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்துவிட்டது. இந் நிலையில், கொரோனா பரவல் காரணமாக, தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம், பொது கூட்டங்கள் தொடர்பான ஆலோசனைகள் வரவேற்கப்படுவதாக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

கட்சிகளின் இந்த ஆலோசனைகளை வரும் 31ம் தேதிக்குள் வழங்க வேண்டும் என்றும் கூறி உள்ளது. அங்கீகரிக்கப்பட்ட தேசியக் கட்சிகள், மாநிலக் கட்சிகளின் தலைவர்கள், பொதுச் செயலர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் இந்த விவரங்களை தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.