மும்பை:

2005ம் ஆண்டு குஜராத்தில் சோக்ராபுதீன் ஷேக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2010ம் ஆண்டு ஜூலை மாதம் அமித்ஷாவை சிபிஐ கைது செய்தது. இந்த வழக்கு விசாரணை குஜராத்துக்கு வெளியே நடைபெற வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் மகாராஜ்டிரா மாநிலம் மும்பையில் விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் 2012ம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த வழக்கில் இருந்து அமித்ஷா 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம் மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

இந்த வழக்கு விசாரணை மற்றும் இதன் தொடர்ச்சியாக நடந்த பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் அடங்கிய கட்டுரையை ‘‘தி கேரவன்’’ என்ற அரசியல் மற்றும் கலாச்சார இணையதள செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த கட்டுரையை நிரஞ்சன் தாக்லே என்ற பத்திரிக்கையாளர் எழுதியுள்ளார். அதன் விபரம்……

2014ம் ஆண்டு நவம்பர் 30ம் தேதி நள்ளிரவு அல்லது டிசம்பர் 1ம் தேதி அதிகாலை சமயத்தில் இந்த வழக்கை விசாரித்து வந்த மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பிரிஜ்கோபால் ஹர்கிஷன் மர்மமான முறையில் இறந்தார். நாக்ப்பூருக்கு அவர் சென்றபோது இந்த மரணம் நிகழ்ந்துள்ளது. அவர் மரணத்தின் போது சோக்ராபுதீன் வழக்கை அவர் தீவிரமாக விசாரித்துக் கொண்டிருந்தார்.

இந்த வழக்கில் பாஜக தேசிய தலைவராக அமித்ஷா முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். நீதிபதி மரணத்திற்கு மாரடைப்பு தான் காரணம் என்று மீடியாக்களில் செய்தி வெளியாயின. ஆனால், இந்த கட்டுரைக்காக 2016ம் ஆண்டு நவம்பர் மற்றும் 2017ம் ஆண்டு நவம்பர் காலக்கட்டத்தில் இந்த மரணம் தொடர்பாக நடத்தப்பட்ட புலன் விசாரணையில் பலவிதமான சந்தேகங்கள் எழுந்தது. அவரது உடலை குடும்பத்தாரிடம் ஒப்படைத்த நிலை உள்ளிட்ட பல்வேறு தருணங்கள் சந்தேகத்தை வலுவடைய செய்துள்ளது.

விசாரணையின் போது, நீதிபதியின் சகோதரியான அனுராதா பியானி. இவர் மகாராஷ்டிரா மாநிலம் துலே பகுதியை சேர்ந்த மருத்துவர். இவர் கூறிய தகவல் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இருந்தது.
அவர் கூறுகையில், ‘‘மும்பை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பிற்காலத்தில் நியமனம் செய்யப்பட்ட மோகித் ஷா இந்த வழக்கில் ஆதரவான தீர்ப்பு வழங்க ரூ.100 கோடி லஞ்சம் வழங்க பேரம் பேசியதாக லோயா தெரிவித்தார்’’ என்று அனுராதா தெரிவித்தார்.

இந்த தகவலை எனது சகோதரர் இறப்பதற்கு சில வாரங்கள் முன்பு தன்னிடம் தெரிவித்தாக அனுதராதா கூறினார். ‘‘கேட்கானில் உள்ள எங்களது மூதாயைர் வீட்டில் நடந்த தீபாவளி கொண்டாட்டத்திற்கு நாங்கள் குழுமியிருந்தோம். அந்த சமயத்தில் இந்த தகவலை என்னிடம் அவர் தெரிவித்தார்’’ என்றார் அனுராதா.
நீதிபதியின் தந்தை ஹர்கிருஷ்ணனிடமும் லோயா இந்த தகவலை தெரிவித்துள்ளார். ‘‘இந்த தீர்ப்பை அவர்களுக்கு சாதகமாக தெரிவித்தால் பணமும், மும்பையில் வீடும் லஞ்சமாக தருவதாக உறுதிமொழி அளித்துள்ளன்னர் என்று லோயா தெரிவித்தார்’’ என்று தந்தை தெரிவித்தார்.

சிபிஐ கோர்ட் சிறப்பு நீதிபதியாக பிரிஜ்கோபால் ஹரிகிஷன் லோயா 2014ம் ஆண்டில் நியமனம் செய்யப்பட்டார். இவருக்கு முன்பு அந்த பதவியில் இருந்த ஜேடி உத்பத் இடமாற்றம் செய்யப்பட்டதற்கு ஒரு காரணம் உள்ளது. இந்த வழக்கின் அமித்ஷா நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை கண்டிக்கும் வகையில் பேசியதால் இந்த இடமாற்றம் நடந்துள்ளது.

2015ம் ஆண்டு பிப்ரவரி ‘அவுட் லுக்’ இதழில் ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது. அதில், ‘‘இந்த வழக்கு விசாரணையின் போது, ஒரு ஆண்டு காலம் உத்பத் நீதிபதியாக பதவியில் இருந்தார். அது வரை தனக்கு நீரிழிவு நோய் இருக்கிறது என்றும், டில்லியில் அதிக வேலைப் பளு இருக்கும் காரணத்தால் பயணம் மேற்கொள்ள இயலாது என்ற காரணம் கூறி வழக்கில் இருந்து ஆஜராக அமித்ஷா தரப்பில் விலக்கு கோரப்பட்டது’’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், அந்த கட்டுரையில், ‘‘2014ம் ஆண்டு ஜூன் 6ம் தேதி அமித்ஷா நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. எனினும் ஜூன் 20ம் தேதி ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்பக் உத்தரவிட்டார். அதோடு ஒவ்வொரு முறையும் அமித்ஷா ஆஜராக காரணங்களை கூறாமல் விலக்கு கோருவதாக அவரது வக்கீலிடம் நீதிபதி உத்பத் கடிந்துகொண்டார்.

அடுத்த வாய்தா ஜூன் 26ம் தேதி. ஆனால், 25ம் தேதி உத்பக் புனேவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இது சொக்ராபுதீன் வழக்கில் 2012ம் ஆண்டு உச்சநீதிமன்ற உத்தரவை மீறிய செயலாகும். அதாவது இந்த வழக்கின் விசாரணையய ஆரம்பம் முதல் இறுதி வரை ஒரே அதிகாரி விசாரிக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிராக அமைந்தது’’ என்று அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அடுத்த நீதிபதியாக லோயா பதவி ஏற்றதும் அமித்ஷாவின் விலக்கு கோரிய மனுவுக்கு அனுமதி வழங்கினார். ஒவ்வொரு வாய்தாவிலும் அமித்ஷா ஆஜராகாதது குறித்து கேள்விகள் எழுந்து கொண்டே இருந்தது. எனினும் அமித்ஷா மீதான குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்படும் வரை அவர் நேரில் ஆஜராக விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்படும் வரை நீதிபதி லோயா இந்த விவகாரத்தில் மிகவும் கண்ணியமிக்க மனிதராகவே நடந்துகொண்டார்.

ஒரு கட்டத்தில் இந்த வழக்கின் புகார்தாரரான சோக்ராபுதீனின் சகோதரர் ரூபாபுதின் வக்கீல் மிகிர் தேசாய் கூறுகையில், ‘‘10 ஆயிரம் பக்கங்கள் கொண்டு குற்றப்பத்திரிக்கையை நீதிபதி லோயா பரிசீலனை செய்தார். அதோடு சாட்சிகள் மற்றம் ஆதாரங்களையும் ஆய்வு செய்தார். இந்த வழக்கு மிக தீவிரம் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை விட, நீதிபதி லோயாவின் நேர்மையை முடிவு செய்யும் வழக்காக அமைந்தது. எனினும் இதற்கான அழுத்தங்கள் நிச்சயம் பெருகும்’’ என்றார்.

மும்பையில் தனது குடும்பத்துடன் தங்கி பயின்று வந்த நீதிபதி லோயாவின் மருமகள் நுபூர் பாலபிரசாத் பியானி, தனது மாமாவுகு ஏற்பட்ட அழுத்தங்களை நேரடியாக உணர்ந்ததாக தெரிவித்தார். அவர் கூறுகையில், ‘‘ எனது மாமா நீதிமன்றத்தில் இருந்து வரும் போது பெரும் பதற்றத்துடன் தான் வருவார். மன அழுத்தம் என்பது பெரிய பிரச்னை. இதனை எப்படி எதிர்கொள்வது என்பது தான் பிரச்னை. ஒவ்வொருவருக்கும் இந்த அனுபவம் இருக்கும்’’ என்றார்.

வக்கீல் தேசாய் மேலும் கூறுகையில், ‘‘ நீதிமன்ற அறைகள் எப்போது அதிகபட்சம் அழுத்தம் கொண்டதாக தான் இருக்கும். குற்றச்சாட்டுகளில் இருந்து அமித்ஷாவை விடுவிக்க எதிர் தரப்பு வக்கீல்கள் அழுத்தம் கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். சிபிஐ தரப்பில் அனைத்து விதமான ஆதாரங்களையும் சமர்பித்தபோதும் இந்த அழுத்தம் ஏற்பட்டது. அனைத்து விதமான தொலைபேசி உரையாடல்களை சமர்ப்பித்தாலும், அவற்றை ஆங்கிலத்தில் சமர்ப்பிக்க வலியுறுத்தப்பட்டது’’ என்றார்.

நீதிபதி அல்லது புகார்தாரர் குஜராத்தியை அறிந்து கொள்ளும் நிலமை இருந்தாலும் இந்த வலியுறுத்தல் தொடர்ந்தது. இந்த வகையில் எதிர்தரப்பு வக்கீலின் மொழிபெயர்பு கோரிக்கை மற்றும் அமித்ஷா விடுவிப்பு தொடர்பாக அழுத்தம் தொடர்ந்து கொண்டே இருந்துள்ளது. நீதிமன்ற அறையில் சந்தேகத்திற்கு இடமான நபர்களின் நடமாட்டத்தை தேசாயின் ஜூனியர் வக்கீல்கள் கண்டுள்ளனர்.

அக்டோபர் 31ம் தேதி நடந்த வாய்ந்த அன்று அமித்ஷா ஏன் வரவில்லை என்று கேள்வி எழுப்பினார். ஆனால், அவரது வக்கீல்கள் ஆஜராவதில் இருந்து விலக்கு பெற்றிருப்பதாக தெரிவித்தனர். மாநிலத்தில் அமித்ஷா இல்லாதபோது தான் இந்த விலக்கு பொருந்தும். அதே நாளில் அமித்ஷா மும்பையில் இருந்துள்ளார்.

மகாராஷ்டிராவில் புதிய அரசு பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்ள அவர் வந்திருந்தார். இங்கிருந்து ஒன்றரை கி.மீ., தொலைவில் தான் நீதிமன்றம் உள்ளது. உள்ளூரில் இருக்கும் போது அவர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று எதிர்தரப்பு வக்கீலிடம் உறுதி பெற்ற பின்னரே வழக்கு விசாரணையை டிசம்பர் 15ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி லோயாக உத்தரவிட்டார்.

நீதிபதி லோயாவின் சகோதரி அனுராதா குற்றம்சாட்டிய நீதிபதி மோகித் ஷா மும்பை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக 2010ம் ஆண்டு ஜூன் முதல் 2015ம் ஆண்டு செப்டம்பர் வரை பதவியில் இருந்தவர். அனுராதா அளித்த தகவலின் படி, அன்று இரவு நேரத்தில் சாதாரண உடையில் வருமாறு நீதிபதி லோயாவை வரவழைத்து அமித்ஷாவுக்கு ஆதரவான தீர்ப்பு அளிக்குமாறு அழுத்தம் கொடுத்துள்ளார்.
இந்த தீர்ப்பை எவ்வளவு விரைந்து வழங்க முடியுமோ அவ்வளவு விரைந்து வழங்க வேண்டும் என்று மோகித் ஷா தெரிவித்ததாக அனுராதா தெரிவித்தார். இதற்காக எனது சகோதரருக்கு ரூ. 100 கோடி வரை லஞ்சமாக கொடுக்க பேரம் பேசப்பட்டது. தலைமை நீதிபதியே இந்த பேரத்தை நடத்தியுள்ளார்.

இந்த தீர்ப்பு டிசம்பர் 30ம் தேதிக்கு முன்பு வழங்கப்பட்டால் மக்களிடம் இது குறித்த பேச்சு குறைவாக இருக்கும் வகையில், அதே நாளில் இதை விட பெரிய நிகழ்வு நடக்கும். அதனால் மக்கள் இந்த தீர்ப்பின் மீது கவனம் செலுத்தமாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை நீதிபதியின் தந்தை பாலகிஷனும் உறுதிப்படுத்தியுள்ளார். எனது மகனுக்கு லஞ்சம் தர பேரம் பேசப்பட்டது உண்மை தான். அதோடு மும்பையில் வீடு வேண்டுமா?. எவ்வளவு நிலம் வேண்டும்? எவ்வளவு பணம் வேண்டும் என்று கூறுங்கள் என்று வலியுறுத்தப்பட்டது. இவற்றை ஏற்க எனது மகன் மறுத்துவிட்டார். அதோடு பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்திருந்தார். இல்லை என்றால் இடமாற்றம் பெற முடிவு செய்திருப்பதாகவும், கிராமத்திற்கு சென்று விவசாயம் செய்ய முடிவு செய்திருப்பதாகவும் லோயா தெரிவித்தாக அவரது தந்தை தெரிவித்தார்.

நீதிபதி குடும்பத்தாரின் இந்த குற்றச்சாட்டு தொடர்பாக கருத்து கேட்க மோகித்ஷா மற்றும் அமித்ஷாவை தொடர்பு கொண்டபோது பதிலளிக்க மறுத்துவிட்டனர். லோயா மரணத்திற்கு பின் சோக்ராபுதீன் வழக்கு விசாரிக்கும் நீதிபதியாக கோசாவி நியமனம் செய்யப்பட்டார். இவரது தலைமையில் 2014ம் ஆண்டு டிசம்பர் 15ம் தேதி விசாரணை தொடங்கியது.

எதிர்தரப்பு வக்கீலின் வாதத்தை அவர் 3 நாட்கள் கேட்டறிந்தார். அதன் பின் அமித்ஷா மீதான அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் அவரை விடுவித்து உத்தரவிட்டார். சிபிஐ இதை எதிர்த்து 15 நிமிடம் வாதிட்டது. இதன் மீதான தீர்ப்பு டிசம்பர் 17ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

நீதிபதி லோயாவின் மரணம் ஏற்பட்டு ஒரு மாதம் கழித்து டிசம்பர் 30ம் தேதி அன்று நீதிபதி கோசாவி கூறுகையில், ‘‘சிபிஐ அரசியல் நோக்கத்துடன் அமித்ஷா மீது குற்றம்சாட்டியுள்ளது என்று கூறி வழக்கில் இருந்து அமித்ஷாவை விடுவிக்கிறேன்’’ என்றார். இதே நாளில் கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக டோணி அறிவித்தார்.

இந்த செய்தி தான் அனைத்து தொலைக்காட்சிகளில் பரபரப்புடன் வெளியிடப்பட்டது. அமித்ஷாவின் விடுவிப்பு செய்தி பெரிய அளவில் தொலைக்காட்சிகளில் இடம்பெறவில்லை. லோயா மரணம் ஏற்பட்டு சுமார் 2 மாதங்கள் கழித்து அவரது குடும்பத்தினரை மோகித் ஷா சந்தித்தார். இவர் சந்தித்து சென்ற பின்னர் லோயாவின் மகன் அனுஜ் 2015ம் ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி எழுதிய கடிதம் ஒன்று வெளியானது. லோயா இறந்து 80 நாட்கள் கழித்து இந்த கடிதம் எழுதப்பட்டது.

அதில், ‘‘ அரசியல்வாதிகள் நினைத்தால் எனது குடும்பத்தில் யாரை வேண்டுமானாலும் கொலை செய்யலாம். அவர்களோடு சண்டை போட எனக்கு சக்தி இல்லை. எனது தந்தை மரணம் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்கப்படுமா? என்று மோகித் ஷாவிடம் கேட்டேன். இதை தடுக்க எங்கள் மீது எத்தகை நடவடிக்கையும் எடுக்க அவர்கள் தயங்கமாட்டார்கள். எனது குடும்பத்தினர் யாரை வேண்டுமானாலும் அவர்கள் கொலை செய்வார்கள். எங்களது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.

அந்த கடிதத்தில் அனுஜ் ஒரு கருத்தை இரண்டு முறை தெரிவித்துள்ளார். ‘‘ எனக்கோ அல்லது எனது குடும்பத்தாருக்கோ ஏதேனும் நடந்தால் மோகித்ஷா மற்றும் இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் தான் பொறுப்பு’’ என்று தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பரில் லோயா தந்தை ஹர்கிஷன் கூறுகையில், ‘‘ எனக்கு 85 வயதாகிறது. நான் மரணத்தை கண்டு அஞ்சவில்லை. எனக்கு நீதி வேண்டும். ஆனால் எனது மகள்கள், பேரக் குழந்தைகளின் உயிரை கண்டு அச்சப்படுகிறேன்’’ என்றார். அப்போது அவரது கண்களில் இருந்து கண்ணீர் வழிய
தொடங்கியது. அப்போது அவரது கண்கள் சுவற்றில் தொங்கிக் கொண்டிருந்த நீதிபதி லோயாவின் புகைப்படத்தை நோக்கி சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.caravanmagazine.in/vantage/loya-chief-justice-mohit-shah-offer-100-crore-favourable-judgment-sohrabuddin-case