டில்லி:

யோத்தி சர்ச்சைக்குரிய வழக்கு தொடர்பாக இன்று இறுதி விசாரணை நடைபெற்று வந்த நிலையில், விசாரணை யின்போது, எதிர்தரப்பினரின் ஆவனங்களை, மற்றொரு தரப்பு வழக்கறிஞர் கிழித்து எறிந்ததால், பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, தலைமை நீதிபதி கடும் எச்சரிக்கை விடுத்தார். அதையடுத்து வழக்கு விசாரணை தொடர்ந்தது.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்று பிரச்சனை 50ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், இதில் இறுதி முடிவு காண தீர்மானித்த உச்சநீதி மன்றம் கடந்த 39 நாட்களாக தொடர்ந்து விசாரணை நடத்தி வந்த நிலையில், 40வது நாளான இன்றுடன் விசாரணை முடியும் என அறிவித்திருந்தது.

இதற்கிடையில், கடந்த மார்ச் மாதம் 8-ஆம் தேதி முன்னாள் நீதிபதி கலிஃபுல்லா தலைமையில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு  கொண்ட மத்தியஸ்தர் குழு அமைத்து சமூகமாக முடிக்க முடிவு செய்தது. இதில் வெற்றி கிட்டாத நிலையில், உச்சநீதிமன்றமே தொடர்ந்து விசாரணை நடத்தியது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட், அப்துல் நசீர், அசோக் பூஷன், போப்டி ஆகியோர் கொண்ட அரசியல் சாசன அமர்வு ராமஜென்ம பூமி நிலம் தொடர்பான வழக்கை விசாரித்து வந்தது.

இன்றைய கடைசி நாள் விசாரணை காரசாரமாக நடைபெற்றது. இன்று நடைபெற்ற விசாரணையில், இந்து அமைப்புகள் தரப்பில் வாதங்கள் முடிந்து, அதற்கான ஆவனங்கள் அடங்கிய புத்தகம் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது எதிர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கோபமடைந்து அந்த புத்தகத்தை கிழித்து எறிந்தார்.

இஸ்லாமிய அமைப்பு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜிவ் தவான், இந்து அமைப்புகள் தாக்கல் செய்த ஆவணங்கள், வரைபடங்களை கிழித்து எறிந்ததுடன்,, நீதிமன்றத்தை ஹிந்து அமைப்புகள் கேலிக்கூத்து ஆக்குவதாகவும் கூறினார். அந்த ஆவணத்தில், ராமர் பிறந்த இடம் குறித்த தகவல்கள் இருந்தன.

இதனால் நீதிமன்றத்தில்  பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கடும் கோபமடைந்த தலைமைநீதிபதி, வழக்கறிஞர்களுக்கு எச்சரிக்கை விடுத்ததுடன், வழக்கறிஞர்கள் ஒழுங்கீனமாக நடந்துகொண்டால், தாங்கள் விசாரணையில் இருந்து எழுந்து சென்று விடுவோம் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.  இப்படி நடப்பது நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பதே தவிர, பலன் எதுவும் ஏற்படாது. நீதிமன்ற அறையின் மாண்பை காக்க வேண்டும் எனக்கூறினார்.

அதைத்தொடர்ந்து இந்து அமைப்பு சார்பில் வாதாடிய எஸ்.கே.ஜெயின்,  வக்பு வாரியத்தால் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்கள் நிதி பெறுவது தொடர்பானதுதான், பாபர் மசூதி தொடர்புடையது அல்ல என்றும், நிதி உதவிக்கும், பாபர் மசூதியை உரிமை கொண்டாடுவதற்கும் எந்த தொடர்பும் இல்லைஎன்றார்.

மேலும்,  அயோத்தியில் ராமர் கோவில்தான் முன்னர் இருந்தது அதன் பின்புதான் கோவிலை இடித்து மசூதி கட்டினார்கள்  என்று கூறியவர், பாபர் அயோத்திக்கு வந்ததற்கான ஆதாரம் இல்லை என்றும் கூறினார்.

இதனை தொடர்ந்து நிர்மோகி அஹாரா அமைப்பு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடுகையில், ராமஜென்ம பூமி என்பது ஒன்றுதான். வேறு இடத்தை கூற முடியாது. முஸ்லிம்கள் எங்கு வேண்டுமானாலும் வழிபடலாம். ராமஜென்ம பூமியில் மட்டும் தான் ஹிந்துக்கள் வழிபட முடியும்.

சர்ச்சைக்குரிய நிலத்தில் முஸ்லிம்களுக்கு உரிமை இல்லை. 1934க்கு பிறகு முஸ்லீம்கள் அங்கு வழிபடுவதை நிறுத்தினர். ஹிந்துக்கள் தான் வழிபாடு செய்கின்றனர் எனக்கூறி தனது வாதத்தை நிறைவு செய்தார். தொடர்ந்து விசாரணை நடைபெற்றது.

இந்த வழக்கு விசாரணை தொடங்கியதும், இந்து மகாசபாவை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர், இந்த வழக்கில் வாதங்களை முன்வைக்க கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் எனக்கூறினார். ஆனால், இதனை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், இந்த வழக்கில் மாலை 5 மணிக்கு முடிவடையும். முடிந்தது முடிந்ததாக இருக்கட்டும் என்றார்.

அதுபோல, சுப்பிரமணியன் சாமி தரப்பில் வாதங்களை வைக்க அனுமதி கோரப்பட்ட நிலையில், வழக்கு தொடர்பாக  மேல்முறையீட்டு மனுக்கள் தொடர்ந்தவர்களுக்கு மட்டும் தான் வாதத்திற்கு அனுமதி, உங்களுடையது இடைகால மனு எனவே இறுதி வாதம் வைக்க அனுமதிக்க முடியாது என்று நீதிபதிகள் மறுத்து விட்டனர்.

இன்றைய விசாரணையில் உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட 3 பேர் கொண்ட மத்தியஸ்த குழு, பேச்சுவார்த்தையின் போது எடுக்கப்பட்ட முடிவுகள் அடங்கிய ஆவணங்களையும் அறிக்கையாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.