நீதிமன்ற நேரத்தை வீணடிக்கக் கூடாது : தலைமை நீதிபதி எச்சரிக்கை

டில்லி

சூரஜ் இந்தியா டிரஸ்ட் என்னும் நிறுவனம் இதுவரை தொடர்ந்துள்ள 64 வழக்குகளில்  நீதிமன்ற செலவு மட்டும் ரூ 25 லட்சத்தை தாண்டியதை தொடர்ந்து, நீதி மன்ற நேரத்தையும் பணத்தையும் வீணடிக்கக் கூடாது என மற்றொரு வழக்கின் தீர்ப்பில்  தலைமை நீதிபதி எச்சரித்துள்ளார்.

சூரஜ் இந்தியா டிரஸ்ட் என்னும் அரசு சாராத நிறுவனம் இதுவரை 64 பொது நல வழக்குகளை நாட்டிலுள்ள பல நீதிமன்றங்களிலும், உயர் நீதி மன்றங்களிலும் தொடர்ந்துள்ளது.  அந்த நிறுவனத்தின் தலைவர் ராஜிவ் தாகியா.  இதுவரை தொடர்ந்த வழக்குகளினால் நீதிமன்ற செலவு ரூ 25 லட்சத்தை தாண்டி உள்ளது.

அனைத்து வழக்கும் சூரஜ் இந்தியா டிரஸ்ட்டுக்கு எதிராகவே தீர்ப்பானது.  இந்த நீதிமன்ற செலவை செலுத்துமாறு ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது.  தவிர இனி ராஜிவ் தாகியா சார்பில் எந்த ஒரு வழக்கையும் பதிவு செய்யப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வினால் ரூ ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்பட்ட ஒரு வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என சவுதாகர் என்பவரின் சார்பில் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.

இதை விசாரித்த தலைமை நீதிபதி, கேஹர், இந்த மனுவை தள்ளுபடி செய்ததோடு,  தேவை இல்லாமல் நீதி மன்ற நேரத்தையும் பணத்தையும் வீணடிக்க கூடாது என சவுதாகருக்கு எச்சரிக்கை விடுத்தார்.

வாதத்தில் ஒரு சிறு பகுதி :

நீதிபதி : இந்த தீர்ப்பு முழுமையாக ஆராய்ந்து தரப்பட்டது.  இதில் மாற்றம் செய்ய எதுவுமில்லை.

சவுதாகர் : இது தவறானது. நியாயமாக இல்லை.

நீதிபதி : அதை முடிவு செய்ய வேண்டியது நீங்கள் இல்லை, நாங்கள், நீங்கள் போடும் ஒவ்வொரு வழக்கும் நீதிபதிகளை எதிர்த்தே உள்ளது. அதை முதலில் திருத்திக் கொள்ளுங்கள். இதற்கு ஒரு முடிவு காண வேண்டும்.

சவுதாகர் : இதில் ஏதும் தவறு இல்லை என நினைக்கிறேன்.

நீதிபதி : அப்படியானால் நீங்கள் அபரதத்துடன் நீதிமன்ற செலவையும் சேர்த்து தரவேண்டும் என தீர்ப்பளிக்கிறேன்.  இதிலும் ஒன்றும் தவறு இல்லை. உங்கள் மனு நிராகரிக்கப்படுகிறது,

தலைமை நீதிபதி அபராதத்துடன் நீதிமன்ற செலவையும் சேர்த்து இன்னும் நான்கு வாரங்களுக்குள் செலுத்த சவுதாகருக்கு உத்தரவிட்டார். மேலும் இனி சவுதாகர் தொடுக்கும் எந்த வழக்கையும் பதிவு செய்யக்கூடாது  எனவும் உத்தரவிட்டார்.

தலைமை நீதிபதி தனது தீர்ப்பில், ”மனுதாரர் இனி எந்த ஒரு பொது நல வழக்கும் தொடுக்க தடை செய்யப்பட்டுள்ளார்.  அவர் தனது சொந்த பிரச்சினைகளை பொது நல வழக்காக பதிவு செய்கிறார்.  அவர் தனது சொந்தப் பிரச்சினைக்கு அதற்கான நீதி மன்றத்தை அணுகி மனு செய்துக் கொள்ளலாம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.