வாஜ்பாய் அஸ்திக்கு முதல்வர், துணைமுதல்வர் மலர்தூவி அஞ்சலி

சென்னை:

பாஜக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்திக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்பட அதிமுக அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினார்.

வயது முதிர்வு காரணமாக நோய்வாய்ப்பட்ட முன்னாள் பிரதமர் வாஜ்பாய், கடந்த 16ந்தேதி சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது உடல் 17ந்தேதி டில்லியில் தகனம் செய்யப்பட்டது. அவரது அஸ்தி காலம் நாடு முழுவதும் உள்ள 100 புண்ணிய தீர்த்தங்களில் கரைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தமிழகம் வந்துள்ள வாஜ்பாய் அஸ்தி கலசம் பொதுமக்கள் அஞ்சலிக்காக பாஜக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த அஸ்தி கலசத்துக்கு தமிழக முதல்வர்  எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட  அமைச்சர்கள்  மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

இன்று காலை  திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், அக்கட்சியின் எம்.பி. கனிமொழி ,  பா.ம.க இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.

வாஜ்பாய் அஸ்தி கலசம் இன்று மாலை 6 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக கமலாலயத்தில் வைக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து  வரும் 26-ஆம் தேதிவரை பொதுமக்கள் அஞ்சலிக்காக தமிழகத்தின் பல ஊர்களிலும் வைக்கப்பட்டு,  இறுதியாக, சென்னை, ராமேஸ்வரம், திருச்சி உள்பட 6  இடங்களில் வாஜ்பாயின் அஸ்தி கரைக்கப்பட உள்ளது.