சென்னை: கொரோனாவால் உயிரிழந்த சென்னை காவல் அதிகாரி பாலமுரளியின் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு பணியில் களம் இறங்கி இருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோருக்கும் கொரோனா பரவி வருகிறது. அந்த வகையில் சென்னை மாம்பலம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி,  சில நாட்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

4 நாட்களுக்கு முன்பு அவரது உடல்நிலை மோசமானதால் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று உடல்நிலை மோசமடைய சிகிச்சை பலனின்றி பாலமுரளி உயிரிழந்தார். இந்த சம்பவம் காவல்துறையினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந் நிலையில், முதலமைச்சர் எடப்படி பழனிசாமி, காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி மறைவு மிகுந்த வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளார். பாலமுரளியை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு  ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாகவும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு தகுதி அடிப்படையில் அரசு பணி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.