சென்னை: மேட்டூர் அணையிலிருந்து வரும்18ம் தேதி முதல் புள்ளம்பாடி, புதிய கட்டளை மேட்டு கால்வாய்களில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மேட்டூர் அணையிலிருந்து, புள்ளம்பாடி மற்றும் புதிய கட்டளை மேட்டு கால்வாய்களின் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடும்படி, திருச்சி, தஞ்சாவூர் மற்றும் அரியலூர் மாவட்ட வேளாண் பெருமக்களிடமிருந்து எனக்குக் கோரிக்கைகள் வந்துள்ளன.

இந் நிலையில் வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, மேட்டூர் அணையிலிருந்து, புள்ளம்பாடி மற்றும் புதிய கட்டளை மேட்டு கால்வாய்களில் நடப்பாண்டு பாசனத்திற்காக 18.8.2020 முதல் 31.12.2020 வரை 136 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன்.

இதன் மூலம் திருச்சி, தஞ்சாவூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் 42,736 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு, உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.