சென்னை:

விழா மேடையில் மோடி இருக்கும்போதே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கைவிடுத்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி எந்தவொரு உத்திரவாதமும் அளிக்காமல் தனது பேச்சை முடித்துக்கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சமீபத்தில் வெளியான காவிரி உச்சநீதிமன்ற தீர்ப்பில், காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இதற்கு கர்நாடக மாநிலம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் மானிய விலையில் பெண்களுக்கு ஸ்கூட்டர் திட்டத்தை பிரதமர் மோடி இன்று சென்னையில் துவக்கி வைத்தார். விழாவில் முதன்மை உரையாற்றிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சமஸ்கிருதத்தைவிட தமிழ்தான் பழமையான மொழி என மாணவர்களுடனான நிகழ்ச்சியில் பிரதமர் மோடி சமீபத்தில் தெரிவித்ததற்கு நன்றி தெரிவித்தார்.

மேலும், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டபடி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார். இந்த கோரிக்கையை பொது மேடையில் எடப்பாடி பழனிச்சாமி முன்வைப்பார் என மோடி எதிர்பார்க்கவில்லை என்பது அவரது முக பாவனைகளில் இருந்து தெரிந்துகொள்ள முடிந்தது.

இதன்பிறகு பிரதமர் மோடி உரையாற்றும்போது காவிரி மேலாண்மை வாரியம் குறித்து தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. மேலும் பாராளுமன்ற மேலவை லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, காலையில் அளித்த பேட்டியொன்றில், காவிரி விவகாரம் தொடர்பாக நல்ல முடிவை மோடி விரைவில் அறிவிப்பார் என கூறியிருந்ததால் எதிர்பார்ப்பு இன்னும் அதிகமானது.

ஆனால் அவர் தனது உரையில் இது குறித்து ஏதும் பேசவில்லை. தவிர மத்திய அரசின் பட்ஜெட் உரையை வாசிப்பது போல பெண்களுக்காகவும், தமிழகத்திற்காகவும் மத்திய அரசு கொண்டுவந்த திட்டங்களை பட்டியலிட்டு பேசி முடித்தார். இது அனைவருக்கும் பெரும் ஏமாற்றத்தை அளித்தது.