6வழிப்பாதை கொண்ட வண்டலூர் மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர் எடப்பாடி…!

சென்னை: கடந்த 2016ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு, ரூ.55 கோடியில் கட்டப்பட்ட வண்டலூர் மேம்பாலத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று திறந்து வைத்தார். இதனால், போக்கு வரத்து நெரிசல் குறையும் என நம்பப்படுகிறது.

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் பூங்கா அருகே ரூ.55 கோடியில் புதியமேம்பாலம் கட்டப் பட்டது. கடந்த 2016ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில்  இந்த மேம்பாலத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த பாலமானது  711 மீட்டர் நீளம் மற்றும் 23 மீ அகலம் கொண்ட 6 வழி சாலை மேம்பாலம் ஆகும்.

பல்வேறு காரணங்களால், கட்டுமானப்பணிகள் இழுபறி நீடித்த நிலையில், 4 வருட தாமதத்திற்கு பிறகு, தற்போது பணிகள் முடிந்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டு உள்ளது.

தமிழக முதல்வர் பழனிசாமி நேரில் வந்து திறந்து பாலத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, கொடியசைத்து போக்குவரத்தை தொடங்கி வைத்தார்.  அதையடுத்து, மாநகரப் பேருந்துகள் ஒவ்வொன்றாக பாலத்தின் மீது  அணிவகுத்துச் சென்றன.

நிகழ்ச்சியில் பேசிய முதல்வர்,  ‘வண்டலூர் மேம்பாலம் திறக்கப்பட்டுள்ளதால், இதன் மூலம் கேளம்பாக்கம் சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று கூறினார். மேலும் கோயம்பேட்டில் கட்டப்பட்டு வரும்  மேம்பால பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு வரும் டிசம்பரில் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என்று தெரிவித்தார்.