டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை திறந்தார் முதல்வர் எடப்பாடி

மேட்டூர்:

டெல்டா பகுதி விவசாயிகளின் பாசனத்திற்கு மேட்டூர் அணையை இன்று காலை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார். அணையில் இருந்து வெளியேறும் நீரில் மலர்கள் தூவினார்.

இன்று மேட்டூர் அணை பாசனத்திற்காக திறக்கப்பட இருந்த நிலையில், நேற்று சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர்  ரோகிணி,  மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் செம்மலை, பொதுப்பணித்துறை, காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளும் அணையைப் பார்வையிட்டனர்

மேட்டூர் அணையில் இருந்து  தண்ணீர் திறந்துவிடும் முதல்வர் எடப்பாடி

இந்த நிலையில்  நேற்று இரவு சேலம் வந்த எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை மேட்டூர் அணைப்பகுதிக்கு வந்தார். அவரை அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், ஆட்சித் தலைவர் உள்பட முக்கிய அதிகாரிகளி, அதிமுக நிர்வாகிகள் வரவேற்றனர்.

சரியாக  காலை 10.30 மணியளவில், மேட்டூர் அணையை பாசனத்திற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்து, பாசனத்திற்காக அணையில் இருந்து வெளியேறிய நீரில் அவர் மலர் தூவினார்.

அதைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய முதல்வர், காவிரி நிதி நீர் பிரச்சினை யில் தமிழகம் வெற்றி பெற்றதை நினைவுகூறும் வகையில் அணைப்பகுதியில் ரூ.2 கோடி செலவில் ஸ்தூபி அமைக்கப்படும் என்று கூறினார்.

தமிழக முதல்வராக பதவிஏற்ற பிறகு எடப்பாடி பழனிச்சாமி முதன்முதலாக மேட்டூர் அணையை விவசாய பாசனத்திற்காக திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது.

மேட்டூர் அணையில் இருந்து ஏற்கனவே குடிநீருக்கு தினசரி ஆயிரம் கன அடி வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், தற்போது விவசாயத்துக்கு  முதல் கட்டமாக விநாடிக்கு 2 ஆயிரம் கனஅடி வீதம் திறக்கப்பட்டு உள்ளது.  பாசனத்திற்கான  தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.