புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் இன்று ஆய்வுசெய்து வரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மாட்டுவண்டியில் சென்று குடிமராமத்து பணிகள் குறித்து ஆய்வு செய்தார். இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

கொரோனா தொற்று பரவல் தடுப்பு, மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று 25வது மாவட்டமாக  புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆய்வு செய்து வருகிறார். முன்னதாக அங்கு ஜல்லிக்கட்டு காளை சிலை மற்றும் ஐடிசி நிறுவனத்தின் தொழிற்சாலைகளை திறந்து வைத்தார்.

அதையடுத்து,  கவிநாடு கண்மாயில் குடிமராமத்து பணியை பார்வையிட்டார். அந்த பணியில் ஈடுபட்டிருந்த விவசாயிகள், தொழிலாளர்களிடம் விசாரித்தார். இதைகண்ட பொதுமக்கள் விவசாயிகள்  முதலமைச்சருக்கு   உற்சாக வரவேற்பு அளித்தார்கள்.  விவசாய அமைப்பினர் அவருக்கு பச்சை துண்டை அணிவித்து வரவேற்றார்கள்.  முதலமைச்சர் ஒரு விவசாயி என்பதால் அவருக்கு பச்சை துண்டி அணிவித்ததாக கூறிய விவசாயிகள்,  குடிமராமத்து பணி மேற்கொண்டதற்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.

இந்த நிகழ்வின்போது,  முதலமைச்சரை வரவேற்க ஏராளமான மாட்டு வண்டிகளில் விவசாயிகள் வந்தனர்.  இதனை பார்த்த முதலமைச்சர் மகிழ்சிசியடைந்து, ஒரு மாட்டு வண்டியில் ஏறிக்கொண்டு சிறிது தூரம் பயணம் செய்தார்.  அப்போது அங்கிருந்த விவசாயிகள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றார்.