சேலத்தில் ஈரடுக்கு புதிய பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி…

சேலம்:

சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே கட்டப்பட்ட புதிய ஈரடுக்கு பாலத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று போக்குவரத்துக்கு திறந்து வைத்தார்.

சேலம் நகரில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு, புதிய பாலம் கட்ட தமிழக அரசு ஏற்பாடு செய்தது. இதற்காக  2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரூ.441 கோடி செலவில் ஈரடுக்கு மேம்பாலத்தைக் கட்ட அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார்.

அதன்படி, இந்த புதிய பாலம் குரங்குச்சாவடி முதல் புதிய பேருந்து நிலையம் வழியே அண்ணா பூங்கா வரை பாலம் கட்டப்பட்டுள்ளது. சுமார்  7.8 கிலோமீட்டர் நீள தூரம் அமைக்கப்பட்டுள்ள இந்த ஈரடுக்கு  மேம்பாலத்தின் ஓடுதளம் 7 மீட்டர் அகலமும், இரட்டை ஓடுதளம் 13.6 மீட்டர் அகலமும் கொண்டாக அமைக்கப்பட்டுள்ளது. பாலத்திற்கு கீழ் இரண்டு புறமும் 7 மீட்டர் அகலம் கொண்ட சேவை சாலையும் அமைக்கப்பட்டுள்ளது.

மேம்பாலத்தைத் தாங்க 173 வலிமையான தூண்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அதிநவீன சிசிடிவி கேமரா, இரவிலும் பகலைப் போல் ஒளிரும் மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த புதிய பாலத்தை  இன்று  காலை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, திறந்து வைத்து  கொடியசைத்து  பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். நிகழ்ச்சியில் பேசிய முதல்வர்,  “சேலம் மக்களின் நீண்ட கால திட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்தப் பாலம் திறக்கப்பட்டிருப்பதால் இனி சேலத்தில் போக்குவரத்து நெரிசல் குறையும். இரண்டடுக்கு மேம்பாலத்துக்கு முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா பெயரும் ஏ.வி.ஆர்.ரவுண்டானா பகுதியில் உள்ள பாலத்துக்குப் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் பெயரும் சூட்டப்படுகிறது. தமிழகத்தின் மிக நீண்ட ஈரடுக்கு மேம்பாலம்’ என்ற சிறப்பையும் பெற்றிருக்கிறது.” என்று கூறினார்.

அதைத்தொடர்ந்து, சேலம் லீ பஜார் பகுதியில் 46 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ரயில்வே உயர்மட்ட மேம்பாலத்தையும் முதலமைச்சர் திறந்து வைத்தார்

தமிழகத்திலேயே சேலத்தில் மட்டும்தான் இவ்வளவு நீளமான ஈரடுக்கு மேம்பாலம் கட்டப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.