சென்னை: தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட  கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மாவட்டங்களுக்கான கலெக்டர் அலுவலகத்திற்கு தமிழகமுதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று  அடிக்கல் நாட்டினார்.  

இதுகுறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (23–ந்தேதி) தலைமைச் செயலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி வட்டம், வீரசோழபுரத்தில் 104 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்திற்கும், செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு வட்டம், வேண்பாக்கத்தில் 119 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்திற்கும், காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்.

முதலமைச்சர் கடந்த 8.1.2019 அன்று சட்டசபையில், கவர்னர் உரையின் மீது நடைபெற்ற விவாதத்திற்கு பிறகு ஆற்றிய பதிலுரையில், விழுப்புரம் மாவட்டம், பெரிய மாவட்டமாக இருப்பதால், நிருவாக வசதிக்காக விழுப்புரம் மாவட்டத்தை பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய மாவட்டம் தோற்றுவிக்கப்படும் என்று அறிவித்தார்.

அந்த அறிவிப்பிற்கிணங்க 12.11.2019 அன்று கள்ளக்குறிச்சி புதிய மாவட்டம் தோற்றுவிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கள்ளக்குறிச்சி பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில், விழுப்புரம் மாவட்டத்திலிருந்து பிரித்து தமிழ்நாட்டின் 34வது மாவட்டமாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தை 26.11.2019 அன்று நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

ரூ.104.44 கோடியில்…

புதியதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு, கள்ளக்குறிச்சி வட்டம், வீரசோழபுரத்தில் 104 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 26,482 சதுர மீட்டர் பரப்பளவில், தரை மற்றும் 8 தளங்களுடன் கட்டப்படவுள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்திற்கு முதலமைச்சர் இன்று காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார். இப்புதிய வளாகத்தில், வருவாய்த் துறை, பொதுப்பணித் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, சமூக நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை அலுவலகங்கள், திட்ட இயக்குநர் அலுவலகம், குழந்தைகள் நல வாரியம், தொழிலாளர் நலத்துறை, மாவட்ட பதிவாளர் அலுவலகம், மாவட்ட நூலகம், பட்டு வளர்ச்சித் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, சுற்றுலாத் துறை, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், கருவூல அலுவலகம், கடவுசீட்டு அலுவலகம், சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகம் போன்ற துறைகளின் அலுவலகக் கட்டடங்கள் கட்டப்படவுள்ளன.

முதலமைச்சர் கடந்த 18.7.2019 அன்று சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், காஞ்சிபுரம் மாவட்டத்தைப் பிரித்து செங்கல்பட்டை தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய மாவட்டம் தோற்றுவிக்கப்படும் என்று அறிவித்தார். அந்த அறிவிப்பிற்கிணங்க 12.11.2019 அன்று செங்கல்பட்டு புதிய மாவட்டம் தோற்றுவிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, செங்கல்பட்டுப் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து பிரித்து தமிழ்நாட்டின் 37-வது மாவட்டமாக உருவாக்கப்பட்ட செங்கல்பட்டு மாவட்டத்தை 29.11.2019 அன்று நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

ரூ.119.21 கோடியில்…

புதியதாக உருவாக்கப்பட்ட செங்கல்பட்டு மாவட்டத்திற்கு, செங்கல்பட்டு வட்டம், வேண்பாக்கத்தில் 119 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 27,062 சதுர மீட்டர் பரப்பளவில், தரை மற்றும் 4 தளங்களுடன் கட்டப்படவுள்ள செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்திற்கு முதலமைச்சர் இன்று காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார். இப்புதிய வளாகத்தில், வருவாய்த் துறை, பொதுப்பணித் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, சமூக நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், கருவூல அலுவலகம், சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகம், ஆதார் / இ-சேவை மையம், எல்காட் அலுவலகம், கடவுசீட்டு அலுவலகம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் போன்ற துறைகளின் அலுவலகக் கட்டடங்கள் கட்டப்படவுள்ளன.

இந்த நிகழ்ச்சியில் சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் சி.வி. சண்முகம், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பா. பென்ஜமின், தலைமைச் செயலாளர் க. சண்முகம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா, வருவாய் நிருவாக ஆணையர், கூடுதல் தலைமைச் செயலாளர் க. பணீந்திரரெட்டி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கள்ளக்குறிச்சியில் 66 அலுவலகங்கள்

விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை கடந்த 26. 11. 2019 அன்று கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு புதிய மாவட்டத்தை தொடங்கி வைத்தார். தற்போது கலெக்டர் அலுவலகம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் கட்டுவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டது. தியாகதுருகம் அருகே உள்ள வீரசோழபுரம் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான 40.18 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி 27.6.2020 அன்று ரூ.104. கோடி ஒதுக்கீடு அரசாணை வெளியிட்டார். இதனை தொடர்ந்து இன்று தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் கலெக்டர் அலுவலகம் கட்டுமான பணியை தொடங்கி வைத்தார்.

கலெக்டர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு, மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு அலுவலகம் மற்றும் குடியிருப்பு, போலீஸ் அணிவகுப்பு மைதானம், விளையாட்டு மைதானம் உள்ளிட்ட 66 அலுவலகம் செயல்பட உள்ளது. இதற்கான பணிகளை விழுப்புரம் செயற்பொறியாளர் வெங்கடாசலம் கள்ளக்குறிச்சி உதவி செயற்பொறியாளர் கவுதமன் மற்றும் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

விழாவில் மாவட்ட கலெக்டர் கிரண்குராலா, மாவட்ட வருவாய் அலுவலர் சங்கீதா, சார் ஆட்சியர் ஸ்ரீ காந்த், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சங்கர், துணை கண்காணிப்பாளர் ராமநாதன் மற்றும் அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். மாவட்ட செயலாளரும், திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறங்காவலர் குழு உறுப்பினருமான குமரகுரு எம்எல்ஏ, பிரபு எம்.எல்.ஏ., வழிகாட்டும் குழு உறுப்பினரும், கழக அமைப்பு செயலாளருமான மோகன், முன்னாள் எம்.எல்.ஏ. அழகுவேல்பாபு, நகர செயலாளர் பாபு, தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் இணைய தலைவர் ராஜசேகர், ஒன்றிய செயலாளர்கள், அய்யப்பா, தேவேந்திரன், அரசு, கிருஷ்ணமூர்த்தி, ராஜேந்திரன், கதிர்தண்டபாணி, மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஞானவேல், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சீனிவாசன், பொருளாளர் வெற்றிவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.