சென்னை:

டில்லியில் இன்று நடைபெற பிரதமர் மோடி  தலைமையிலான கூட்டத்தில் பங்கேற்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டில்லி புறப்பட்டு சென்றார்.

தேசப்பிதா மகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு விழா அடுத்த ஆண்டு அக்டோபர் 2-ந் தேதி முதல் 2020-ம் ஆண்டு அக்டோபர் 2-ந் தேதி வரை ஓர் ஆண்டு காலம் கொண்டாடப்பட தீர்மனிக்கப்பட்டுள்ளது.

இந்த விழாவை சிறப்பாக கொண்டாடவும், அதையொட்டி நிறைவேற்றப்பட உள்ள சிறப்பு திட்டங்கள் குறித்த ஆலோசிக்கவும் இன்று மாநில முதல்மந்திரிகள் மாநாட்டுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்திருந்தது.

 

இதுகுறித்து ஏற்கனவே 114 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில், முன்னாள் பிரதமர்கள் வாஜ்பாய், தேவேகவுடா, மன்மோகன் சிங், முன்னாள் துணை பிரதமர் அத்வானி, மத்திய மந்திரிகள், முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, தற்போதைய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மல்லிகாஜூன கார்கே (காங்கிரஸ்), அமித்ஷா (பா.ஜனதா), முலாயம் சிங் (சமாஜ்வாடி), சரத்பவார் (தேசியவாத காங்கிரஸ்), சீதாராம் யெச்சூரி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), சுதாகர் ரெட்டி (இந்திய கம்யூனிஸ்டு), வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ரவிசங்கர், சத்குரு ஜக்கி வாசுதேவ்   நாடாளுமன்ற சபாநாயகர், மாநில முதல்மந்திரிகள் உள்பட ஏராளமானோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த குழுவின் முதல் கூட்டம் டில்லியில் பிரதமர் மோடி முன்னிலையில்,  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் இன்று  மாலை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  இன்று காலை 6 மணிக்கு விமானம் மூலம் டெல்லி  புறப்பட்டுச்சென்றார்.  காலை 8.55 மணிக்கு டிலலி சென்றடைந்த எடப்பாடி, அங்கு  தமிழ்நாடு இல்லத்தில் தங்கி உள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பிரச்சினை தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் ஆஜராகி வாதாடும் வழக்கறிஞர்கள் குழுவினரை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.

தொடர்ந்து மாலை நடைபெற உள்ள கூட்டத்தில் பங்கேற்றபின், நாளை காலை சென்னை திரும்புகிறார். இதற்கிடையில், பிரதமர் நேரம் ஒதுக்கினால், அவரை சந்தித்து பேசவும் எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டுள்ளார். இல்லையென்றால் மத்திய அமைச்சர்களை சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்துவார் என கூறப்படுகிறது.

இந்த கூட்டத்தை ஆந்திரா, தெலங்கானா முதல்வர்கள் புறக்கணிக்க  இருப்பதாகவும் கூறப்படுகிறது.