இன்று மாலை ஆளுநரை சந்திக்கிறார் முதல்வர் எடப்பாடி… நன்றி தெரிவிப்பா?

சென்னை: தமிழகஅரசின் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் இன்று ஒப்புதல் வழங்கிய நிலையில், ஆளுநர் பன்வாரிலாரை  இன்று மாலை  தமிழக முதல்வர் பழனிசாமி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்போது, அரசின் இடஒதுக்கீடு சட்டத்துக்கு ஒப்புதல் வழங்கியதற்காக ஆளுநருக்கு நன்றி தெரிவிப்பார் என்று கூறப்படுகிறது.

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா நிறைவேற்றப்பட்டு ஒன்றரை மாதத்திற்கு மேல் ஆகியும், ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளிக்காமல் இழுத்தடித்து வந்தார்-. அதனால் நடப்பாண்டு மாணவர் சேர்க்கையில், இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்தது. இதனால் சட்ட மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என பல தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால், ஆளுநர் மேலும் காவஅவகாசம் தேவை என கூறினார்.

இந்த நிலையில், தமிழகஅரசு, இடஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்தி அரசாணை வெளியிட்டது. இதன் மூலம் 300க்கும் மேற்பட்ட  மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரிகளில் சேர வாய்ப்பு இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  இதனைத்தொடர்ந்து  வேறுவழியின்றி, இன்று காலை, 7.5% ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கினார்.

மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கியதற்கு, திமுக தலைவர் மு.க ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த் என பலர் ஆளுநருக்கு நன்றி தெரிவித்தனர்.

இந்த நிலையில், சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளித்ததற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக முதல்வர் பழனிசாமி ஆளுநரை இன்று மாலை நேரில் சந்திக்கவிருக்கிறார். இந்த சந்திப்பு சென்னை ராஜ்பவனில் இருக்கும் ஆளுநர் மாளிகையில் நடக்கவிருக்கிறது.