முதலமைச்சர் ‘எட்டிப்பார்க்காத’ பழனிசாமி: ஸ்டாலின் கடும் சாடல்

திருச்சி:

ஹெலிகாப்டரில் பறந்துகொண்டே ஆய்வு நாடகம் நடத்திய முதலமைச்சர்  எடப்பாடி பழனிச்சாமி அல்ல ‘எட்டிப்பார்க்காத’ பழனிசாமி, என்று ஸ்டாலின் கடுமையாக சாடினார்.

மத்திய அரசிடம் நிதி கேட்குமுன் பாதிக்கப்பட்ட மக்கள் – பொது நல அமைப்புகளிடம் முதல மைச்சர் ஆலோசித்திருக்க வேண்டாமா? என்று கேள்வி எழுப்பிய ஸ்டாலின்,  “அதிமுக அரசின் ஊழல்-கலெக்சன்–கமிசன்–கரப்சனுக்கு மத்திய அரசு துணை நிற்கிறதே தவிர  மக்களுக்காக அல்ல என்றும் கூறினார்.

முன்னதாக கஜா புயல் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்க சுமார் 4 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்களை திருச்சி திமுக தலைமையகமான கலைஞர் அறிவாலயத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது. 100க்கும் மேற்பட்ட வாகனங்களில் செல்லும்  நிவாரண பொருட்களை இன்று காலை திமுக தலைவர் ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், அதிமுக அரசுமீது கடுமையாக சாடினார்.

கஜா புயல் நிதி கேட்க டில்லி சென்றுள்ள முதல்வர், அதற்கு முன்பு புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் – பொது நல அமைப்புகளிடம் ஆலோசித்திருக்க வேண்டாமா?” “அதிமுக அரசின் ஊழல்-கலெக்சன்–கமிசன்–கரப்சனுக்கு மத்திய அரசு துணை நிற்கிறதே தவிர – மக்களுக்காக அல்ல”  என்று ஸ்டாலின்  குற்றம் சாட்டினார்.

இந்திய தென் எல்லையே இயற்கையால் வஞ்சிக்கப்பட்டிருக்கும் போது, மக்களுக்கு நிவாரணம் வழங்க மத்திய அரசிடமிருந்து இன்னும் முதற்கட்ட நிதிகூட வரவில்லை என்று கூறியவர,  ஏற்கனவே, ஏற்பட்ட பேரிடர் பாதிப்புகளுக்கு உரிய நிவாரணம் வழங்காத மத்திய அரசு, இந்த கஜா புயலுக்காவது நிதியை முழுமையாக வழங்கிட வேண்டும் என்றும் வற்புறுத்தினார்.

கஜா பாதிப்புக்குள்ள மாவட்டங்களில் திமுக சார்பில் இலவச மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருவதாக தெரிவித்த ஸ்டாலின், திமுக மருத்துவ அணி தலைவர் பூங்கோதை ஆலடி அருணா, செயலாளர் என்.எஸ்.கனிமொழி மற்றும் நிர்வாகிகள் பல்வேறு பகுதிகளில் இலவச மருத்துவ முகாம்களை நடத்தி, ஏராளமானோருக்கு சிகிச்சைகள் வழங்குவதோடு அவர்களுக்கு தேவையான நிவாரணங்களும் அளித்து வருகின்றனர் என்றார்.

திருச்சி திமுக தலைமை அலுவலகத்தில் திமுக தொண்டர்களுடன் ஸ்டாலின்

மேலும், ஏற்கனவே திமுக தொண்டர்களிடம் கேட்டுக்கொண்டபடி, மாநிலம் முழுவதுமுள்ள கழக நிர்வாகிகளிடமிருந்து திருச்சி – கலைஞர் அறிவாலயத்துக்கு நிவாரண பொருட்கள் வந்து குவிவதாகவும், அவை அனைத்தும் உடனுக்குடன் கஜா பாதித்த பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு  தவிக்கும் மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

தம்மீது முதல்வர் எடப்பாடி குற்றம் சாட்டி பேசி வருகிறார், கஜா புயல் விவகாரத்தில் நான் அரசியல் செய்வதாக கூறி வருகிறார், டில்லிக்குச் சென்றும் எதிர்க்கட்சிகளை விமர்சித்து பேட்டி தருகிறார்.

அவருக்கு ஒரு வேண்டுகோள்….  அரசியல் செய்வதற்கு இது நேரமில்லை. இன்றுகூட இரு விவசாயிகள் தற்கொலை செய்து மாண்டிருக்கிறார்கள். உடனே, தற்கொலைகளை தடுத்தாக வேண்டும்! இனியாவது, ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபடுங்கள் என்று ஆலோசனை கூறினார்.

ஹெலிகாப்டரில் பறந்துகொண்டே ஆய்வு நாடகம் நடத்திய முதலமைச்சர் ‘எட்டிப்பார்க்காத’ பழனிசாமி, என்றும் விளித்து கூறினார்.

நான் விடுத்த வேண்டுகோளை ஏற்று, கஜா புயல் பாதிக்காத மாவட்டக் கழகங்கள் அனுப்பிய 4 கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை கொண்ட 100 லாரிகளை, டெல்டா மக்களுக்கு அனுப்பி வைத்தேன்! உண்ண உணவளித்த நம் டெல்டா மக்களுக்கு வாரி வழங்கிக் கொண்டி ருக்கும் அனைவருக்கும் என் நன்றி!

இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.