சென்னை:
“தமிழக முதல்வர் ஜெயலலிதா குணமாகவேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பம். ஆனால் அதற்காக குழந்தைகளுக்கு அலகு குத்தி கொடுப்படுத்துவது தவறு” என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
“உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதிமுக பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா விரைவில் உடல் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பமும் ஆகும். ஆனால், முதலமைச்சரிடமும், அவருக்கு நெருக்கமாக இருப்பவர்களிடமும் பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக, வேண்டுதல் என்ற பெயரில் அக்கட்சியின் நிர்வாகிகள் நடத்தும் மனித உரிமை மீறல்கள் கவலையும், வேதனையும் அளிக்கின்றன.

அலகு குத்தப்பட்ட சிறுவன் - ஜெயலலிதா
அலகு குத்தப்பட்ட சிறுவன் – ஜெயலலிதா

முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலம் பெற வேண்டும் என்பதற்காக, முதல்வரின் இராதாகிருஷ்ணன் நகர் தொகுதியிலுள்ள தண்டையார்பேட்டை நேதாஜி நகர் முருகன் கோவிலில் கடந்த திங்கட்கிழமை சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டிருக்கிறது. வடசென்னை வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் நடத்தப்பட்ட அந்த நிகழ்வில் நேதாஜி நகர் முருகன் கோவிலில் தொடங்கி தண்டையார் பேட்டை மணிக்கூண்டு அருகிலுள்ள சேனியம்மன் கோவில் வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் ஏந்தி வந்தனர். அதுமட்டுமின்றி, நூற்றுக்கும் மேற்பட்டோர் உடலில் அலகு குத்தி வந்தனர். அவர்களில் இருபதுக்கும் மேற்பட்டோர் 5 முதல் 12 வயது வரையுள்ள குழந்தைகள் என்பது தான் பெருங்கொடுமை. அலகு குத்தும் போது, வலி தாங்க முடியாமல் அக்குழந்தைகள் கதறித் துடித்தது காண்போர் நெஞ்சை கணக்க வைத்தது. குழந்தைகள் வேண்டாம் என மறுத்தும் கட்டாயப்படுத்தி அலகு குத்தப்பட்டது. சென்னையில் மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளிலும் இத்தகைய வன்முறைகள் தொடர்கின்றன.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா நலம் பெற வேண்டும் என்று வழிபாடு நடத்துவதும், காவடி எடுப்பது, பால்குடம் சுமப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதும் அதிமுகவினரின் உரிமை. அவர்களின் நம்பிக்கையில் எவரும் தலையிட முடியாது. அது நாகரிகமும் கிடையாது. ஆனால், அத்தகைய வழிபாடுகள் அனைத்துமே சுய விருப்பத்தின் அடிப்படையிலானவையாக இருக்க வேண்டும். மாறாக ஒன்றுமறியா அப்பாவிக் குழந்தைகளை கட்டாயப்படுத்தி அலகு குத்தி கொடுமைப்படுத்துவது இதயம் உள்ள எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாததாகும். பால் மனம் மாறாத குழந்தைகளின் ஒரு கன்னத்தில் இரண்டு அடி நீளமுள்ள தடிமனான வேலை குத்தி அதை இன்னொரு கன்னம் வழியாக இழுத்து நிறுத்தும் இரக்கமற்ற கொடுமையை எந்த காரணத்தைக் கூறியும் நியாயப்படுத்த முடியாது.
அதிமுகவினரின் இச்செயல் மன்னிக்க முடியாத மனித உரிமை மீறலாகும். இந்தியா கையெழுத்திட்ட குழந்தை உரிமைக்கான ஐ.நா. ஒப்பந்தத்தில்,‘‘குழந்தைகளின் உரிமைகள் மதிக்கப்படுதல், பாதுகாக்கப் படுதல், நிறைவேற்றப்படுதல் ஆகியவற்றை உறுதி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு அரசுகளுக்கு உள்ளது. குழந்தைகளின் உடல் நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பாரம்பரிய நடைமுறைகளை ஒழிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசுகள் எடுக்க வேண்டும்’’ என்று தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. ஆனால், இந்தக் கடமையை செய்ய வேண்டிய முதலமைச்சரின் பெயரால், குழந்தைகள் மீது அவர்களின் உடல் நலனை கெடுக்கக்கூடிய அலகு குத்துதல் உள்ளிட்ட சடங்குகளை அதிமுகவினர் திணிப்பது கண்டிக்கத்தக்கது.
9
அதிமுகவினர் இத்தகைய செயல்களில் ஈடுபடுவது இதுதான் முதல் முறை என்று கூற முடியாது. முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளின் போதும், ஜெயலலிதா ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்ட போதும் இதேபோன்ற செயல்களில் அதிமுகவினர் ஈடுபட்டனர். முதலமைச்சர் ஜெயலலிதாவின் 68-ஆவது பிறந்தநாளையொட்டி கடந்த பிப்ரவரி மாதம் சென்னை வேளச்சேரியில் 668 பேருக்கு பச்சை குத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது வாக்களிக்கும் வயதை எட்டாத பள்ளி மாணவி ஒருவருக்கு கட்டாயப்படுத்தி பச்சைக் குத்தப்பட்டது. இதனால் ஏற்பட்ட வலியை தாங்கிக் கொள்ள முடியாமல் அம்மாணவி கதறி அழுகிறார்; துடிக்கிறார்.
ராமதாஸ்
ராமதாஸ்

‘‘என்னால் வலி தாங்க முடியவில்லை. தயவு செய்து என்னை விட்டு விடுங்கள்’’ என்று கதறுகிறார். ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் சில பெண்கள் அவரை பிடித்துக் கொள்ள அவருக்கு பச்சை குத்தி முடிக்கப்படுகிறது. அந்த நிகழ்ச்சிக்கு விருந்தினராக வந்திருந்த அப்போதைய அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இந்தக் கொடுமையை பார்த்து குலுங்கி குலுங்கி சிரித்த காட்சிகள் பதிவு செய்யப்பட்டு வாட்ஸ்-அப்பில் வலம் வந்தன.
முதலமைச்சர் நலம் பெற வேண்டும் என்பதற்காக அலகு குத்திக் கொள்ளவும், முதல்வரின் பிறந்த நாளில் பச்சைக் குத்திக் கொள்ளவும் கட்டாயப்படுத்தப்படும் குழந்தைகளில் ஒருவர் கூட அதிமுக ஆட்சியில் பயனடைந்த அமைச்சர்களின் குழந்தைகளோ, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழந்தைகளோ அல்ல. அவர்கள் அனைவரும் அடுத்த வேளை உணவுக்கு வழியில்லாத பரம ஏழைக் குழந்தைகள் ஆவர். அவர்களின் வறுமையைப் பயன்படுத்திக் கொண்டு, சில நூறு ரூபாய்களைக் கொடுத்து அக்குழந்தைகளுக்கு இந்த சடங்குகளைச் செய்து கட்சித் தலைமையிடம் நல்ல பெயரை வாங்கிக்கொள்வதை அதிமுகவின் இரண்டாம் நிலை தலைவர்கள் வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். விசுவாசத்தையும், வழிபாட்டையும் கூலிக்கு ஆள் வைத்து செய்வது என்ன வகையான பக்தியோ?
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலம் பெற வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். அதற்காக குழந்தைகள் மீது இதுபோன்ற வன்முறைகளை திணிப்பது ஏற்றுக் கொள்ள முடியாததாகும். இத்தகைய செயல்களில் எவரும் ஈடுபட வேண்டாம் என்று ஆட்சித் தலைமையும், அதிமுக தலைமையும் அறிவுறுத்த வேண்டும். இத்தகைய கொடுமைகள் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையமும், குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையமும் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து இதற்கு காரணமானவர்களையும், அவர்களை தூண்டியவர்களையும் தண்டிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்” – இவ்வாறு டாக்டர் ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.