நெல் கொள்முதல் கணினி மயமாக்கும் திட்டம்: முதல்வர் எடப்பாடி தொடங்கி வைத்தார்

சென்னை:

விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யும்  பணிகளை முழுமையாக கணினி மயமாக்கும் மின்னணு கொள்முதல் திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில், தஞ்சாவூர், திருவண்ணாமலை, விழுப்புரம், நாகப்பட்டினம், கோயம்புத்துார், ஈரோடு, திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல் உள்பட பல மாவட்டங்களில் விவசாயிகளிடம் இருந்து விளைந்த நெல்கள் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

மாநில நுகர்பொருள் விநியோகக் கழகம், மார்க்ஃபெட், நபெஃட், தொடக்கவேளாண்மை கூட்டுறவு சங்கம் மற்றும் டி.டி.சி.சி போன்ற நிறுவனங்கள் வழியே மாநில அரசாங்கம் விவசாயிகளிடமிருந்து நெல்லை நேரடிக் கொள்முதல் செய்கின்றது. எனினும் இந்திய உணவுக் கழகம் இதில் முக்கியப் பங்காற்றுகின்றது.

இதன்படி, விவசாயிகளிடமிருந்து நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதார விலையில் நெல்லினைப் கொள்முதல் செய்வதாகும். இதனால் விவசாயிகளுக்குரிய விலை கிடைக்கச்செய்ய வகை செய்கிறது. இதில் பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. சரியானபடி பணப்பட்டாவாடா நடைபெறுவதில்லை என்று குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்,  தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் தமிழ்நாடு முழுவதும் நடத்தப்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகளிடமிருந்து பெறப்படும் நெல் கொள்முதல் பணிகளை முழுமையாக கணினி மயமாக்கும் திட்டத்தை  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.

இதற்காக  7 கோடியே 6 லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான மின்னணு கொள்முதல் திட்டத்திற்கான மென்பொருள் செயல்முறையினை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  மின்னணு கொள்முதல்  திட்டத்தின் மூலம், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், மின்னணு முறையில் விவசாயிகளிடமிருந்து நெல்லினை கொள்முதல் செய்வதற்கு ஒரு நேரடி நெல்கொள்முதல் நிலையத்திற்கு ஒரு இயந்திரம் வீதம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கும் மொத்தமாக 2100 அதற்கு தேவையான மென்பொருள்களும் உருவாக்கப்பட்டு அதை நிறுவுவதற்கு தேவையான சாதனங்களும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் மூலம், விவசாயிகளிடமி ருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கான தொகை உடனடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு முழுமையான மின்னணு கொள்முதல் முறை நடைமுறைப்படுத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும்,  546 கோடியே 84 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குரோம்பேட்டை, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், பொறியியல் மற்றும் பல் தொழில்நுட்ப கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு உலக தரத்திலான உயர் தொழில்நுட்ப பயிற்சிகள் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள திறன்மிகு மையத்தை காணொலிக் காட்சி மூலம் துவக்கி வைத்தார்.

காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரம் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகள், வேலூர் தந்தை பெரியார் அரசு தொழில்நுட்ப கல்லூரி, தரமணி மத்திய பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் ஆவடி முருகப்பா பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப திறன் வளர்ச்சி மையங்களையும் திறந்து வைத்தார்.

காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய இடங்களில் உள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகள், வேலூரில் உள்ள தந்தை பெரியார் அரசு தொழில்நுட்ப கல்லூரி, தரமணியிலுள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் ஆவடியில் உள்ள முருகப்பா பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப திறன் வளர்ச்சி மையங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.

கனிம நிறுவனத்தின் சார்பில் வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், செவ்வாத்தூர் கிராமத்தில் 1 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள வெர்மிகுலைட்டை விரிவாக்கும், தொழிற்சாலையை திறந்து வைத்தார்.

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் சேலம் மாவட்டம், ஆத்தூரில் 1 கோடியே 11 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆதி திராவிடர் நலப்பள்ளி மாணவர் விடுதிக் கட்டடத்தை காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.