போராட்டக்காரர்களை முதல்வர் நேரில் சந்தித்து விளக்க வேண்டும்! ஸ்டாலின்

--

சென்னை,

ற்போது இயற்றப்பட்டுள்ள அவசர சட்டம் குறித்து போராட்டதில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள், மாணவர்களை முதல்வர் நேரில் சந்தித்து தெளிவுபடுத்த வேண்டும் என தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வற்புறுத்தி உள்ளார்.

தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி போராட்டம் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் ஒருசில இடங்களில் அதிமுகவினர் துணையோடு அரசு ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தி வருகிறது.

மதுரை பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தவிடாமல் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், முதல்வர் ஓபிஎஸ் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடம் தமிழக முதல்வர் நேரில் சந்தித்து விளக்க வேண்டும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழ் மக்களின் ஒட்டு மொத்த பங்கேற்புடன் இளைஞர்களும், மாணவர்களும் உருவாக்கிய எழுச்சிமிக்க போராட்டம் மத்தியமாநில அரசுகளை அசைய வைத்திருப்பதே ‘தை புரட்சி’ என்றும் ‘மெரினா புரட்சி’ என்றும் வர்ணிக்கப்படும் தமிழர்களின் வரலாற்று சிறப்புமிக்க புரட்சிக்கு கிடைத்துள்ள முதல் கட்ட வெற்றியாகும்.

மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் உணர்வை காலதாமதமாகவேனும் புரிந்து கொண்டு இரண்டு அரசுகளும் செயல் பட்டிருப்பதும் வரவேற்புக் குரியது தான்.

தி.மு.க ஆட்சிக்காலத்தில் ஜல்லிக்கட்டு நடத்த உரிய திருத்தங்களுடனும் பாதுகாப்புக்கான நிபந்தனைகளுடனும் உடனடியாக சட்டம் நிறைவேற்றப்பட்டு, ஜல்லிக்கட்டுப் போட்டிகள் தடையின்றி நடைபெற்றதை பல முறை சுட்டிக்காட்டி, அதுபோல அ.தி.மு.க அரசும் உடனடியாக சட்ட மன்றத்தைக் கூட்டி சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தினோம்.

ஜனவரி 3-ந்தேதி அலங்காநல்லூரில் தி.மு.க. நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கட்சி சார்பற்ற இளைஞர்கள் பலரும் கலந்து கொண்டு ஆதரவினைத் தெரிவித்தனர். உரிய காலத்தில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால் தமிழர் திருநாளான பொங்கல் விழாவில் பாரம்பரிய முறைப்படி ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடை பெற்றிருக்கும்.

பொங்கல் விழாவிலேயே ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறும் வகையில் அவசர சட்டம் நிறைவேற்றியிருந்தால் மக்களின் போராட்டத்திற்கு அவசியமிருந்திருக்காது.

அந்த காலதாமதத்தின் விளைவாக இந்த அவசர சட்டமே நிரந்தரச் சட்டம் தான் என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சொல்வதை மக்கள் நம்ப மறுக்கிறார்கள்.

அலங்காநல்லூரில் முதல்வர் தொடங்கி வைக்க நினைத்த ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு அந்த ஊர் மக்கள் உள்பட அனைத்துத் தரப்பினரும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்ட இடங்களிலும் எதிர்ப்புகள் உள்ளன.

மக்களின் நம்பிக்கையைப் பெறாத நிலையில், ஒரு சட்டம் எவ்வளவு தான் பாதுகாப்பானதாக இருந்தாலும் தற்காலிகமாக உரிமைகளை மீட்பதாக இருந்தாலும் அது நடைமுறைப் பயனைத் தராது.

எனவே, முதல்வர், அவசர சட்டமே நிரந்தர சட்டம் என்று சொல்வதை தவிர்த்து , அவர்களின் கோபம் தணியும் வகையில், நிரந்தரத் தீர்வுக்கு வழி காணும் வகையில் மாநில அரசு என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க இருக்கிறது, அதற்கு மத்திய அரசின் சட்ட ஒத்துழைப்பை எந்த அளவு பெற்றிருக்கிறது,

இனி எக்காலத்திலும் நீதிமன்றத் தடை வராத படி ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற என்னென்ன முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன என்பதை போராட்டக் களத்தில் உள்ள இளைஞர்கள் மற்றும் மாணவர்களை நேரில் சந்தித்துப் பேசி தெளிவுபடுத்த வேண்டும்.

இந்த ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த இந்த அவசர சட்டம் உதவும் என்பதையும், அடுத்த ஆண்டு முதல் நிரந்தர சட்டம் வாயிலாக, தடையின்றிப் போட்டிகள் நடைபெறும் என்பதையும் அவர்களிடம் நேரில் விளக்கி அவர்களுக்கும் மக்களுக்கும் நம்பிக்கை ஏற்படுத்தி, ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த ஆவன செய்து, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நிரந்தரமாக நடைபெறவும், நிரந்தர அமைதி நிலவவும் முதல்வர் உடனடியாக நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.