புதுச்சேரி:  புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை புதுச்சேரி முதலவர், அங்குள்ள ராஜீவ் காந்தி குழந்தைகள் மற்றும் மகளிர் மருத்துவமனையில் தொடங்கி வைத்தார். முதல் ஊசி மருத்துவ பணியாளர் முனுசாமிக்கு செலுத்தப்பட்டது.

நாடு முழுவதும் இன்று கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.  காலை 11 மணி அளவில் பிரதமர் மோடி, தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்துள்ள நிலையில், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள ராஜீவ் காந்தி குழந்தைகள் மற்றும் மகளிர் மருத்துவமனையில், கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை  முதல்வர்  நாராயணசாமி இன்று (ஜனவரி 16) காலை தொடக்கி வைத்தார்.

இதையடுத்து,  முதல் தடுப்பூசி, அம்மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவ பணியாளர் முனுசாமிக்கு செலுத்தப்பட்டது.

பின்னர்  செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர்  நாராயணசாமி, புதுச்சேரியில் ஐந்து இடங்களிலும், காரைக்காலில் மூன்று இடங்களிலும் மாகி, ஏனாம் பகுதிகளில் தலா ஒரு இடங்களிலும் தடுப்பூசி செலுத்தும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள், மத்திய அரசு நிறுவன ஊழியர்கள் என ஒன்பதாயிரம் பேர் உள்பட சுகாதாரப் பணியாளர்கள் 24 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது . அதையடுத்து 2வது கட்டமாக முன்களப் பணியாளர்களான அரசுத் துறைகளை ஊழியர்கள், அரசு அலுவலர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் எனவும், மூன்றாம் கட்டமாக 50 வயதை கடந்தவர்கள், நீரிழிவு நோய், இருதய நோய், புற்று நோய், ரத்த அழுத்தம் போன்ற வியாதிகள் இருப்பவர்களுக்கு செலுத்தப்படும் எனவும் கூறினார்.