பெங்களூரு:

கிராம தரிசனம் திட்டப்படி  வறட்சி ஆய்வு குறித்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கர்நாடக முதல்வர் குமாரசாமி, அங்குள்ள பள்ளி ஒன்றில், தரையில் படுத்து தூங்கினார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் தூங்கும் புகைப்படம் வைலாகி வருகிறது.

கிராமங்களில் தங்குதல் என்ற திட்டத்தின் கீழ் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி யாத்கிர் அருகே உள்ள சந்திராகி கிராமத்தில் தங்கினார். அங்குள்ள அரசு பள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள முந்தைய இரவே வந்த நிலையில், அன்றைய தினம் இரவில் அரசு பள்ளியில் ஒரு பெட்ஷிட் மட்டும் விரித்து தரையில் படுத்து தூங்கியுள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

மாநிலத்தில் நிலவி வரும் வறட்சி குறித்து ஆய்வு செங்ய கிராம தரிசனம் திட்டத்தை முதல்வர் குமாரசாமி அறிவித்தார். அதன்படி  கிராமத்தில் தங்கி மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடிவு செய்தவர் மாதத்திற்கு 4 முறை கிராமங்களில் சுற்றுப்பயணம் செய்வதாக அறிவித்தார். அதன்படி கிராமங்களில் சுற்றுப்பயணம் தொடங்கி உள்ளார்.

இதுகுறித்து கூறிய குமாரசாமி,  நான் முன்பு மேற்கொண்ட கிராம தரிசன திட்டத்தில் தங்கிய கிராமங்களில் என்னென்ன பணிகள் நடந்தன என்பது எனக்கு தெரியும் என்று கூறியவர்,  பல்வேறு கிராமங்களில் பிரச்சினைகள் இருப்பதாக செய்திகள் வருகின்றன என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் சந்திராகி கிராமத்துக்கு வந்த முதல்வர் குமாரசாமி, அங்கு   பள்ளிக் குழந்தைகளுடன் சேர்ந்து இரவு உணவை எடுத்துக்கொண்டார்.  ஆனால் அங்கு குமாரசாமிக்கு 5 நட்சத்திர வசதிகள் செய்து தரப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.

இதுகுறித்து பதிலளித்த குமாரசாமி, என்ன 5 நட்சத்திர வசதி என்று கேள்வி எழுப்பினார். தாம் தரையில் கூட படுத்து உறங்க தயார் என்றும் அவர் பதிலளித்தார். மேலும், தனக்கு குறைந்தபட்ச வசதிகள் கூட இருக்கக் கூடாதா என்று எதிர்க்கட்சியினரிடம் கேள்வி எழுப்பிய குமாரசாமி ஓய்வில்லாவிட்டால் தம்மால் பணிகளை எப்படி கவனிக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பினார்.

தான் தங்குவதால், சின்ன குளியலறை கட்டப்பட்டிருப்பதாக ஒப்புக் கொண்ட அவர், அதை தனது வீட்டுக்கு கொண்டு செல்லப் போவதில்லை என்றும் கூறினார்.

ஸ்டார் ஓட்டல்களில் தங்கி, ஹெலிகாப்டர்களில் விழாவுக்கு வரும் ஆடம்பர முதல்வர்களில் மத்தியில் கர்நாட முதல்வரின் இந்த எளிமை அனைவராலும் பாராட்டப்படுகிறது