சென்னை,

மிழினப்படுகொலையை நினைவுகூர்ந்து நினைவேந்தல்  நடத்திய திருமுருகன் உள்ளிட்டோர் மீது குண்டர் சட்டத்தைப் பாய்ச்சியதை கண்டித்து வரும் 17.06.2017 அன்று தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லம் முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

ஆண்டுதோறும் சென்னை மெரினா கடற்கரையில் மே 17 இயக்கம் சார்பில்  இலங்கை இனப்படுகொலை நிகழ்ச்சி நடந்து வருகிறது. ஆனால் இந்த ஆண்டு கடந்த 21ந் தேதி ஞாயிறன்று நடத்த இருந்த நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு எடப்பாடி பழனிசாமி அரசு தடை விதித்தது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்த வரை தடையின்றி நடந்து வந்த இந்த நிகழ்ச்சிக்கு,ஜெயலலிதாவின் ஆட்சியையே தொடர்வதாகச் சொல்லும் எடப்பாடி அரசு தடை விதிக்கக் காரணமென்ன?

நடுவண் மோடி அரசின் தூண்டுதலால்தான் எடப்பாடி தடை விதித்தார் என்பது வெட்டவெளிச்சமானது.  இறந்தவர்களை நினைவுகூரும் நிகழ்ச்சி நீர்நிலைகளின் கரையில்தான் உலகெங்கும் காலகாலமாக நடந்து வருகிறது. அதற்கு உலகில் எந்த நாட்டிலும் தடை இருப்பதில்லை.

திருமுருகன் காந்தியோ அல்லது மற்ற மூவருமோ இதுவரை வன்முறைச் செயல்களில் ஈடுபட்டதாக அவர்கல் மேல் எந்த வழக்கும் கிடையாது. அப்படியிருக்க அவர்கள் மேல் மீது குண்டர் சட்டத்தை ஏவியிருப்பது, எடப்பாடி அரசின் வஞ்சக நோக்கத்தையே காட்டுகிறது.

இனப்படுகொலைக்குள்ளான தமிழீழ மக்களை நினைவுகூருவதை வன்முறைச் செயல் போல் சித்தரிக்க முயல்வது, மோடி அரசின் எடுபிடியாகத் தமிழக அரசு மாறிவிட்டதையே காட்டுகிறது. மோடி அரசின் ஆசையையே எடப்பாடி அரசு நிறைவேற்றியிருக்கிறதாக  தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி குற்றம் சாட்டுகிறது.

உடனடியாக தோழர் திருமுருகன் உள்ளிட்ட நால்வர் மீதான குண்டர் சட்ட வழக்கை ரத்து செய்து, அவர்களை சிறையிலிருந்து விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள், தமிழ் இன உணர்வாளர் அமைப்புகள், பெரியாரிய அமைப்புகள், மாணவர்கள், இளைஞர்கள், மகளிர் அமைப்புகள் உள்ளிட்ட தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பில் தமிழக அரசுக்கு இந்த வேண்டுகோளை முன் வைத்து  தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பில்  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி  இல்லம்    முற்றுகையிடும் போராட்டம் நடைபெற உள்ளது.

இந்த மாபெரும் முற்றுகைப் போராட்டத்தில் ஜாதி, மத, கட்சிகளைக் கடந்து தமிழராய் அணி திரண்டு வாரீர் என அன்புடன் அழைக்கிறேன்.

இவ்வாறு கூறியுள்ளார்.