சென்னை:
டல்நலமின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சிறிது நேரத்துக்கு முன் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் சந்தித்து நலம் விசாரித்தார்.
உடல் நலக்குறைவால், தமிழக முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்றுடன்  பத்து நாட்கள் ஆகின்றன. ஜெயலலிதா உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் பரவிவருகின்றன. பல்வேறுவித வதந்திகளால்  மக்களிடையே ஒருவித பதட்டம் நிலவுகிறது. இதையடுத்து ‘முதல்வரின்  உடல்நிலை குறித்து ஆளுநர் அறிக்கை வெளியிடப்பட வேண்டும்” என்ற கோரிக்கை பல்வேறு தரப்பில் இருந்தும் எழுந்தது.

கோப்பு படம
கோப்பு படம

தி.மு.க தலைவர் கருணாநிதி,  “அப்பாவித் தொண்டர்களுக்காகவாவது ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கிற புகைப்படம் ஒன்றை எடுத்து வெளியிட்டு குழப்பத்தைப் போக்கிட யாரும் முன்வரவில்லையே. ஒரு வாரத்துக்கு மேல் சிகிச்சை பெற்றுவரும் முதலமைச்சரை தமிழக ஆளுநர் இதுவரை நேரில் சென்று பார்க்கவில்லையே. முதல்வரின் உடல்நிலை பற்றிய செய்தி யாருக்கும் தெரிந்துவிடக் கூடாதென்று மூடு மந்திரமாக வைத்திருப்பதால், ஒரு சிலர் வேண்டுமென்றே விரும்பத்தகாத செய்திகளை எல்லாம் வதந்திகளாக பரப்பி வருகிறார்கள். அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கிற வகையிலாவது சிகிச்சை பெற்றுவரும் முதலமைச்சரின் புகைப்படத்தை வெளியிட்டிருக்க வேண்டும்.
மேலும் தமிழகத்தில் தற்போது நிர்வாக குளறுபடி ஏற்பட்டுள்ளது. இதை கவர்னர் கையிலெடுத்து சரி செய்ய வேண்டும்” என்று கோரியிருந்தார்.
இதற்கிடையே உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ரீகன் எஸ்.பெல் என்பவர், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் “எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் அல்லது முதலமைச்சர் உடல்நிலையை பரிசோதிக்க சிறப்பு மருத்துவர் ஒருவரை நியமித்து அவர்மூலம் அறிக்கை பெற வேண்டும். முதல்வர் ஜெயலலிதா பணியாற்றும் செயல்திறனோடு உள்ளாரா என்பதை தமிழக ஆளுநர் மூலம் குடியரசுத் தலைவர் அறிந்துகொள்ள வேண்டும். இந்த நடைமுறைகளில், ஜெயலலிதா செயல்படும் நிலையில் இல்லை என்று தெரியவந்தால், சட்டப்பிரிவு 356-ஐ பயன்படுத்தி தமிழக அரசைக் கலைத்துவிட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சியை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும்” என்று கோரி இருந்தார்.
இந்த நிலையில் தமிழக கவர்னராக கூடுதல் பொறுப்பு வகிக்கும் வித்யாசாகர் ராவ் இன்று தமிழகம் வந்தார். பத்து நிமிடங்களில், அப்போலோவில் இருந்து ஆளுநர் மாளிகைக்கு புறப்பட்டுச் சென்றார்.
முதல்வரின் உடல் நிலை குறித்து மருத்துவர்களிடம் அவர் அறிக்கை கேட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
மேலும், ஏற்கெனவே மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஜெயலிலதாவை சந்தித்ததாக சொல்லப்பட்டது. அந்த சந்திப்பு புகைப்படம் வெளியிடப்டவில்லை. அதனாலும் வதந்திகள் மேலும் பரவியது. இப்போது கவர்னர் சந்தித்தாக சொல்லப்படுகிறது. இந்த சந்திப்பு புகைப்படமாவது வெளியிடப்படுமா என்ற எதிர்பார்ப்ப மக்களிடையே எழுந்துள்ளது.