ஆளுநருன் முதல்வர் திடீர் சந்திப்பு: பேசியது என்ன?

சென்னை:

மிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று இரவு திடீரென சந்தித்து பேசினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சந்திப்பின்போது தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் மழை எச்சரிக்கை குறித்து இருவரும் விவாதித்ததாக கூறப்படுகிறது.

தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக அரசுக்கு எதிராக அமமுக தலைவர் டிடிவி தினகரன் காய் நகர்த்தி வருகிறார். ஏற்கனவே துணை முதல்வர் பன்னீர்செல்வம், எடப்பாடி ஆட்சியை கவிழ்க்க தன்னுடன் டீலிங் பேசியதாக தகவலை வெளியிட்டு அதிமுக ஆட்சியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளார். இது அதிமுகவில் பற்றியெரியும் நிலையில், நேற்று மாலை துணைமுதல்வர் ஓபிஎஸ் நீண்ட விளக்கம் கொடுத்தார்.

இதற்கிடையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, அவரது இல்லத்தில் மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் சந்தித்து பேசினார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு தான் என்று இதை கூறினாலும், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.

அதைத்தொடர்ந்து நேற்று இரவு சுமார் 7 மணி அளவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து பேசினார். இது தமிழக அரசியல களத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்த நிலையில், ஆளுநர் பன்வாரிலாலுடன் ரெட் அலர்ட் எச்சரிக்கை காரணமாக எடுக்கப்பட்டுள்ள முன் எச்சரிக்கை நடவடிக்கை குறித்து விளக்கியதாக தமிழக அரசு தெரிவித்து உள்ளது.

தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் 7ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதையொட்டி, நேற்று முதல்வர் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது முன்னெச்சரிகை நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தப் பட்டதாக கூறப்பட்டது.

அதைத்தொடர்ந்தே, நேற்று இரவு 7.15 மணியளவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை கிண்டியில் உள்ள ராஜ் பவனுக்கு சென்று கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து பேசினார். அவருடன் தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உடன் சென்றார்.

இந்த சந்திப்பின்போது, தமிழக கவர்னராக பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைவதையொட்டி பன்வாரிலால் புரோகித்துக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.. மேலும் மிக கனமழை எச்சரிக்கையையொட்டி அரசு எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி விளக்கி கூறப்பட்டதாகவும் அரசு தெரிவித்து உள்ளது.

ஆனால், சுமார் 30 நிமிடம் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது,  ஆளுநருடன் தமிழக அரசியல் நிலவரம் குறித்து எடப்பாடி பேசியதாகவும் உறுதிப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.