சென்னை: கொரோனா வைரஸ் போக்கை கண்காணிக்க மாவட்ட நிர்வாகத்தை முழு எச்சரிக்கையுடன் வைத்திருக்குமாறு அனைத்து கலெக்டர்களுக்கும் தலைமை செயலாளர் அறிவுறுத்தி உள்ளார்.

கொரோனா கட்டுப்பாட்டு பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு அவர் கடிதம் ஒன்றை அனுப்பி இருக்கிறார். அந்த கடிதத்தில், தொற்று நிர்வாகத்தில் மிக மோசமான நேரம் இன்னும் வரவில்லை. அடுத்து வரக் கூடிய நாட்களில் ஏதேனும் நோய் பரவல் இருந்தால், அதனை கையாள தயாராக இருக்க வேண்டும்.

கொரோனா வராமல் தடுப்பது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து ஆட்சியர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

அரசின் விதிமுறைகளை தனியார் மருத்துவமனைகள் கடைபிடிக்கிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் அவர் அறிவுறுத்தி உள்ளார். முன்னதாக, தனிமைப்படுத்துதல் விதிகளை மீறுவோருக்கு ரூ.500, முகக்கவசம் அணியாமல் இருப்பவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.