டில்லி:

டில்லி நட்சத்திர ஓட்டலில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை  17 ஆக உயர்ந்துள்ளது. பலர் மாடியில் இருந்து குதித்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது தீ அணைக்கப்பட்டுள்ளது.

தீ விபத்தில் இறந்தவர்களுக்கு டில்லி மாநில அரசு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்குவதாக அறிவித்து உள்ளது.

தீ கொழுந்துவிட்டு எரியும் காட்சி

தலைநகர் டில்லியில் உள்ள   கரோல் பாக் பகுதியில் பிரபலமான அர்பித் பேலஸ் என்ற நட்சத்திர ஓட்டல் உள்ளது.  இங்கு 150 க்கும் மேற்பட்டோர் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது.

இன்று அதிகாலை 4.30 மணிக்கு இந்த ஓட்டலில்  திடீரென தீவிபத்து ஏற்பட்டது.  இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் உடடினயாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

சுமார் 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், 28 வாகனங்களில் சம்பவ இடத் திற்கு வந்து தீயை அணைக்கும் முயற்சி மேற்கொண்டனர். அதைத் தொடர்ந்து காலை 8 மணி அளவில் தீ கட்டுப்படுத்தப்பட்டதாக கூறப்பட்டது.

ஓட்டலில் சிக்கியவர்களை காப்பாற்றும் முயற்சியில் வீரர்கள்

இந்த பயங்கர தீவிபத்தில் ஓட்டலின் மேல்தளம் முழுமையாக எரிந்து நாசமானது. தீ விபத்து ஏற்பட்டபோது, பலர் அறையினுள் தூங்கிகொண்டிருந்ததால், அவர்கள் வெளியேற முடியாத படி மாட்டிக்கொண்டனர்.  இந்த சம்பவத்தில், பெண்கள், குழந்தை உள்ளிட்ட 17 பேர் உயிரிழந்தனர்.

தீயைணப்பு வீரர்கள் கடுமையாக போராடி 35 பேரை  பாதுகாப்பாக மீட்டனர்.  மேலும் 3 பேரை காணவில்லை என போலீசார் கூறியுள்ளனர்.

தீவிபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல் துறையினர் தெரிவித்து உள்ளனர்.

இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப் படும் என டில்லி அரசு அறிவித்து உள்ளது.

மேலும்,  இந்த தீ விபத்து காரணமாக,  இன்று நடைபெற இருந்த டில்லி மாநில ஆம்ஆத்மி அரசின் 4 ஆண்டு கால சாதனை  நிகழ்ச்சியை ரத்து செய்வதாக துணை முதல்வர் மனிஷ் சிசோடியா தெரிவித்து உள்ளார்.