ஊரடங்கைப் பயன்படுத்தி குழந்தை திருமணங்கள்.. அதிகாரிகள் காட்டிய அதிரடி…. 

ஊரடங்கைப் பயன்படுத்தி குழந்தை திருமணங்கள்.. அதிகாரிகள் காட்டிய அதிரடி….

மதுரை செல்லூர் மேலதோப்பு பகுதியில் 15 வயது சிறுமிக்கும் 32 வயதான அவருடைய தாய் மாமாவிற்கும் திருமணம் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், சட்டத்திற்குப் புறம்பான இந்த திருமணம் குறித்து செல்லூர் போலீசார் மற்றும் மாவட்ட குழந்தைகள் நலக் குழுவினருக்கு அந்த பகுதி மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட குழந்தைகள் நலக் குழு உறுப்பினர்கள் மற்றும் போலீசார் சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தைத் தடுத்து நிறுத்தி சிறுமியை அங்கிருந்து மீட்டு கடச்சனேந்தல் பகுதியிலுள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.  மேலும் இது குறித்த அறிக்கையை தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதே போல் மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் 13 வயது சிறுமிக்குத் திருமணம் நடைபெற இருப்பதாக வெளியான தகவலை அறிந்த காவல்துறையினர், சிறுமியின் உறவினர்களைக் காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தி, சட்டத்திற்குப் புறம்பான அத்திருமணத்தைத் தடுத்து நிறுத்தினர்.

ஊரடங்கைப் பயன்படுத்தி மதுரையில் ஒரே நாளில் இரண்டு சிறுமிகளுக்குத் திருமணம் நடைபெற இருந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

– லெட்சுமி பிரியா