சேலம்:

நாமக்கல்லை சேர்ந்த ஓய்வுபெற்ற நர்ஸ் அமுதா குழந்தைகளை விற்பனை செய்தது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,  ராசிபுரம், கொல்லிமலை பகுதிகளில் கடந்த 2 ஆண்டுகளில் விநியோகிக்கப்பட்ட சுமார் 4500 பிறப்பு சான்றிதழ்கள் ஆய்யும் செய்யும் பணியை அதிகாரிகள் தொடங்கி உள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த செவிலியர் அமுதா, குழந்தைகளை விற்பனை செய்து வருவது தொடர்பான ஆடியோ வெளியானது.  அந்த ஆடியோவில் பேசிய அமுதா, குழந்தைகளின் கலருக்கு ஏற்ப விலை பேசும் விவரமும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அத்துடன்,   70 ஆயிரம் ரூபாய் கொடுத்தால், குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் பெற்றுத் தரப்படுவதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த ஆடியோ பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நர்ஸ் அமுதா கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம்  நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு, ராசிபுரம் துணை காவல் கண்காணிப்பாளர் விஜயராகவன், ராசிபுரம் காவல் ஆய்வாளர் செல்லமுத்து உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள், அமுதாவிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் குழந்தைகளை வாங்கி விற்பனை செய்து வந்ததை ஒப்புக்கொண்டார். அவருக்கு உதவியாக இருந்த  கணவர் ரவிச்சந்திரனும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இநத் நிலையில்,  ராசிபுரம், கொல்லிமலை பகுதியில் கடந்த 2 ஆண்டுகளில் வழங்கப்பட்ட சுமார் 4,500 பிறப்புச் சான்றிதழ்களை ஆய்வு செய்யும் பணியை அதிகாரிகள் தொடங்கி உள்ளனர்.

மருத்துவமனை மற்றும் வீட்டில் பிறந்த குழதைகளின் பிறப்புச் சான்றிதழ் குறித்த உண்மை தன்மை குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.