பிரான்ஸ் :15 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பள்ளியில் மொபைல் உபயோகிக்கத் தடை

பாரிஸ்

பிரான்ஸ் நாட்டில் 15 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்குப் பள்ளியில் மொபைல் உபயோகப்படுத்த் தடை விதிக்கப்பட்டுள்ளது.

உலகெங்கும் மொபைல் போன் உபயோகம் மிகவும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மாணவர்கள் மத்தியில் இந்த மோகம் மிகவும் உள்ளது.  விளையாட்டு, இணையம் எனப் பல வழிகளில் மொபைல் போன்களை பயன்படுத்தும் பல மாணவர்கள் அதற்கு அடிமையாக உள்ளனர் எனக் கூறலாம். இந்த நிலை குறித்து பிரான்ஸ் நாட்டின் அதிபர் இமானுவேல் மாக்ரோன் மிகவும் கவலை அடைந்துள்ளார். குறிப்பாகப் பள்ளி மாணவர்கள் மொபைல் போனுக்கு அடிமையாவது குறித்து அவர் தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளார்.

இதையொட்டி கடந்த ஜூலை மாதம் பிரான்ஸ் அதிபர்  இமானுவேல் மாக்ரோன் 15 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்கள் பள்ளி நேரத்தில் மொபைல் பயன்படுத்த தடை விதித்தார். இந்த தடை ஏற்கனவே உள்ள போதிலும் இதை தற்போது அவர் பள்ளி நேரங்களில் அதாவது உணவு இடைவேளை உள்ளிட்ட முழு நேரத்திலும் பயன்படுத்தத் தடை விதித்துள்ளார். இந்த சட்டம் கடந்த மாதம் 5 ஆம் தேதி முதல் அமலாகி உள்ளது. அப்போது பிரான்ஸ் நகரப் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.

இந்த மாதம் மீண்டும் பள்ளிகள் தொடங்க உள்ளதால் மாணவர்களில் பலருக்கு இந்த தடை மிகவும் அதிர்ச்சியை அளிக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த புதிய சட்டத்தின் படி மாணவர்கள் பள்ளி நேரங்களில் மொபைல் போனை அணைத்து விட்டு அதைப் பள்ளியின்  பெட்டகத்தில் வைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் மொபைலுக்கு அடிமையாவது மிகவும் குறையும் என அந்நாட்டு ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரான்ஸ் நாட்டுக் கல்வி அமைச்சர் ஜீன் மைக்கேல், “இந்த சட்டம் மிகவும் உன்னதமானது. இந்த 21 ஆம் நூற்றாண்டுக்குத் தேவையான  ஒரு சட்டமாகும். பிரான்ஸ் நாட்டில் உள்ள 1.2 கோடி பள்ளி மாணவர்கள் இதனால் தங்கள் ஒழுக்கத்தை மேம்படுத்த ஏதுவாகும். தொழில்நுட்ப முன்னேற்றம் என்பது எந்த அளவுக்கு நமது குழந்தைகளுக்கு அவசியம் என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும்”எனத் தெரிவித்துள்ளார்.