சென்னை: தமிழகத்தில் ‘டெங்கு’ உள்ளிட்ட பலவகை காய்ச்சல்களால், 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்தாண்டின் செப்டம்பர் மாதம் முதல், தமிழ்நாட்டில் ‘டெங்கு’ மற்றும் ‘நிமோனியா’ போன்ற காய்ச்சல் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற பிரச்சினைகளால் குறைந்தபட்சம் வாரத்தில் ஒருவர் உயிரிழக்கும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.

உயிரிழந்த 10 குழந்தைகளில், 7 குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. ஆனால், இதேகாலகட்டத்தில், கடந்தாண்டு உயிரிழந்த கழந்தைகளின் எண்ணிக்கை 5 மட்டுமே. அதேசமயம், உயிரிழப்பு அதிகரித்ததற்கு பெற்றோர்களின் அலட்சியமே காரணம் என்றும் குற்றம் சாட்டுகிறது சுகாதாரத்துறை.

சுகாதாரத்துறை சார்பில் எவ்வளவோ விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்யப்பட்டும், அதை பெற்றோர்கள் முறையாகப் பின்பற்றுவதில்லை என்று சுகாதாரத்துறை சார்பில் குற்றம் சாட்டுகின்றனர்.

காய்ச்சல் என்று வந்தால், உடனடியாக தகுந்த மருத்துவர்களிடம் காட்டி பரிசோதனை செய்யாமல், வீட்டிலேயே இருக்கும் மருந்துகளைக் கொடுத்து சரிசெய்ய முயல்கின்றனர். இதுதான் நிலைமையை மோசமாக்குகிறது.

கடைசியில், நிலைமை தீவிரமடையும்போது மருத்துவமனைக்கு தூக்கி வருகையில், எந்தப் பிரயோஜனமும் இருப்பதில்லை என்று சுகாதாரத்துறை சார்பில் குற்றம் சாட்டப்படுகிறது.