போலீசார் விழிப்புணர்வு பிரசாரம்

திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்டத்தில் குழந்தைகளை கடத்தும் கும்பல் நடமாடுவதாக மக்களிடையே ஏற்பட்டுள்ள பீதியை போக்கும் வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் போலீசார் வீதிவீதியாக விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

சமீப காலமாக திருவள்ளூர் மாவட்டத்தில் வேலைக்கு செல்லும் இளம்பெண்கள் காணாமல் போவதாக காவல்துறையில் ஏராளமான புகார்கள் குவிந்துள்ளது. இந்நிலையில்,  கடந்த சில நாட்களாக குழந்தைகளை கடத்தும் கும்பல் ஊடுருவியுள்ளதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வருகிறது.

இதன் காரணமாக  அறிமுகமில்லாத  நபர்கள், திருநங்கைகள், வட மாநிலத்தை சேர்ந்த சிறு வியாபாரிகள், பெண்கள் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர்.

இதன் காரணமாக, இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சந்தேகம் படும்படியான நபர்கள் தென்பட்டால் அவர்களை பிடித்து காவல்துறையில் ஒப்படைக்கும் படியும், பொதுமக்கள் யாரும் தாக்குதல்களில் ஈடுபடக்கூடாது என வலியுறுத்தியும், அப்பாவிகள் பாதிக்கப்படுவதை தடுக்கும் நோக்கில், திருவள்ளுர் மாவட்டத்தில் போலீசார் ஆட்டோக்கள் வாயிலாக முக்கியமான இடங்கள், சந்திப்பு பகுதிகள், கிராமங்கள் தோறும்  வீதிவீதியாக சென்றும்  விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.