காத்மண்டு: உலகின் உயரமான எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை மீண்டும் அளவிட்டு மறுமதிப்பீடு செய்யும் பொருட்டு, சீனாவின் சர்வே குழு எவரெஸ்ட் சென்றடைந்துள்ளது.
உயரமான எவரெஸ்ட் சிகரத்தை இதுவரை ஆறு முறை அளவிட்ட சீனா, இருமுறை உயரத்தையும் வெளியிட்டது. அவர்கள் கணக்கீட்டின்படி, எவரெஸ்ட் சிகரம் 1975ம் ஆண்டு 8,848.13 மீட்டராகவும், 2005ம் ஆண்டு 8,844.43 மீட்டராகவும் இருந்தது.
அந்நாடு இறுதியாக கணக்கிட்ட உயர அளவு, நேபாள நாடு எடுத்திருந்த கணக்கீட்டைவிட, 4 மீட்டர் குறைவாக இருந்தது. இதனால், சிகரத்தின் உயரத்தை மீண்டும் துல்லியமாக அளவீடு செய்ய, சீனாவின் சர்வே குழுவினர் மே மாதம் 1ம் தேதி முடிவு செய்தனர்.
இதையடுத்து, அக்குழுவினர் திபெத் வழியாக புறப்பட்டுச் சென்று, நேற்று(மே 27) எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தனர். “எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை மீண்டும் அளவீடு செய்வது, இயற்கையை பற்றிய மனித அறிவை மேம்படுத்துவதோடு, விஞ்ஞான வளர்ச்சியை அதிகரிக்க உதவும் என்று நம்புகின்றனர் விஞ்ஞானிகள்” என்று அந்நாட்டு அரசின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.