வாஷிங்டன்

ஹாங்காங் போராட்டக்காரர்களுக்கு ஆதரவான அமெரிக்க மசோதாவில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டதால் சீனா கோபம் அடைந்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்த சீன நாட்டுக்குச் சொந்தமான ஹாங்காங் தீவு மாவட்ட குழு தேர்தலில், ஜனநாயக ஆதரவாளர்கள் அமோக வெற்றி பெற்றனர். அத்துடன் இந்தத் தேர்தலில் சீன அரசுக்கு ஆதரவான வேட்பாளர்கள் படுதோல்வி அடைந்தனர்.  ஹாங்காங் நகர தலைமை நிர்வாகி கேரி லேம்  ஹாங்காங்கில்  கடந்த ஆறு மாதங்களாக நடைபெறும் போராட்டத்தின் விளைவுதான் இந்த முடிவு என்பதால் தீர்ப்பை ஏற்பதாகவும், மக்களின் நீண்டகாலக் கோரிக்கைகளை இதன் அடிப்படையில் பரிசீலிப்பதாகவும் அறிவித்துள்ளார்.

ஹாங்காங் விவகாரத்தில் எந்த நாடும் தலையிட வேண்டாம் என்று சீனா தொடர்ந்து எச்சரிக்கை விடுத்துள்ளது.   ஆயினும் அமெரிக்கா ஹாங்காங் விவகாரத்தில் போராட்டக்காரர்களுக்கான ஆதரவு நிலைப்பாட்டைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறது.  தனது ஆதரவின் ஒரு பகுதியாக ஹாங்காங் போராட்டக்காரர்களுக்கு ஆதரவான மசோதா ஒன்றில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புதன்கிழமை கையெழுத்திட்டார்.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட அந்த மசோதாவில் ஹாங்காங் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய அந்நாட்டு காவல்துறைக்குக் கண்ணீர்ப் புகைக் குண்டுகள், ரப்பர் குண்டுகள், பெப்பர் ஸ்பிரே ஆகியவற்றை ஏற்றுமதி செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த மசோதாவில் கையெழுத்திட்டது குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ”சீன அதிபர் ஜி ஜின்பிங், ஹாங்காங்  மற்றும் சீன மக்கள் மீதுள்ள மரியாதை அடிப்படையில் நான் இந்த மசோதாவில் கையெழுத்திட்டுள்ளேன்.  இந்த மசோதா ஹாங்காங்கில் நீண்டகால அமைதி ஏற்பட ஹாங்காங் அற்றும் சீனப் பிரதிநிதிகள் வேறுபாடுகளை இணக்கமாகத் தீர்த்துக்கொள்ள வேண்டி இயற்றப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

இதனால் சீனா கடும் கோபமடைந்துள்ளது.  இது குறித்து சீன நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் சீனாவின் உள் நாட்டு விவகாரங்களில் அமேரிக்கா தலையிடுவதாகவும்,  இந்த மூலம் சர்வதேச சட்டம் மற்றும் சர்வதேச உறவுகளின் விதிகளை அமெரிக்கா மீறி உள்ளதாகவும் குற்றம் சாட்டி உள்ளார்.