பெய்ஜிங் :

லக சுகாதார அமைப்பு சீனாவிற்கு ஆதரவாக செயல்படுவதாகவும், சீனா தரும் உண்மைக்கு மாறான புள்ளிவிவரங்களை ஆராயாமல் அப்படியே ஏற்றுக்கொள்கிறது, இந்த அமைப்புக்கு அமெரிக்கா தான் பெருமளவில் நிதியுதவி செய்வதாகவும், அதனை நிறுத்துவது குறித்து ஆலோசித்துவருவதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் இரு தினங்களுக்கு முன் அறிவித்திருந்தார்.

அமெரிக்காவுக்கு முன்னரே, தைவான் சீனாவை குறைகூறியதோடு, இதுகுறித்து பல ஆதாரபூர்வமான தகவலை உலக சுகாதார அமைப்பிற்கு அனுப்பி வைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவிவருகிறது.

இந்நிலையில் இன்று, தைவான் நாட்டு உள்விவகாரங்கள் துறை அதிகாரி ஒருவர் பேசுகையில், “உலக சுகாதார அமைப்பில் தங்களுக்கு கிடைக்க வேண்டிய நிரந்தர இடத்தை சீனா தனது ஆதிக்கத்தால் தடுத்துவருவதாக” குற்றம்சாட்டினார்.

தைவான் என்பது சீனாவின் ஆளுகைக்கு உட்பட்ட பிராந்தியமாகவே ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட உலக அமைப்புகளில் கூறிவருகிறது சீனா, ஆனால் தைவானோ தாங்கள் தனி நாடு எங்களுக்கு உரிய அந்தஸ்த்தை வழங்கவேண்டும் என்று கோரி வருகிறது, உலக சுகாதார அமைப்பில் தைவான் உறுப்பு நாடாக அல்லாமல் பார்வையாளராகவே இருந்துவந்தது குறிப்பிடத்தக்கது.

தைவானின், இந்த குற்றசாட்டை தொடர்ந்து சீன ராணுவ செய்தித்தொடர்பாளர் பேசுகையில், “தொற்றுநோய் உலகை அச்சுறுத்தி வரும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இன வாத கருத்துக்களையோ, உலக சுகாதார அமைப்பின் செயலாளர் டெட்ராசுக்கு எதிராகவோ பேசி அரசியல் ஆதாயம் தேடநினைத்தால் சீனா அமைதியாக இருக்காது” என்று டெட்ராசுக்கு ஆதரவாக களமிறங்கினார்.

ஏற்கனவே, அமெரிக்கா ஆதாரமற்ற குற்றசாட்டை கூறிவருவதாக தெரிவித்த சீன அரசு, தென் சீன கடலில் தங்கள் ஆதிக்கத்தை வலுப்படுத்த போர்கப்பல்களை சமீப நாட்களாக நிறுத்திவருகிறது, சென்றவாரம் வியட்நாமை சேர்ந்த மீன்பிடி படகுஒன்றை சீன போர்க்கப்பல் மூழ்கடித்ததாக வியட்நாம் குற்றம் சாட்டியது.

கொரோனா வைரஸின் காரணமாக தென் சீன கடல் பகுதியில் உள்ள நாடுகளில் நிலவிவரும் அரசியல் ஸ்திரமற்ற தன்மையையே இந்த நிகழ்வுகள் வெளிப்படுத்துகிறதோ என்று எண்ண தோன்றுகிறது.