பன்றிக் காய்ச்சல் எதிரொலி; சீனாவில் 200,000 பன்றிகள் கொன்று குவிப்பு

சீனாவில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் என்னும் கொடிய நோய் பரவுவதைத் தடுக்க 200,000 பன்றிகள் கொன்று குவிக்கப்பட்டதாக சீன கால்நடை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நோய் பாதித்துள்ள மாகாணங்களில் இருந்து இறைச்சிக்காக பன்றிகளை பிற பகுதிகளுக்கு கொண்டு செல்ல சுகாதாரத்துறை தடை விதித்துள்ளதால் பன்றி இறைச்சி விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 27 நகரங்களில் பாதிப்பு ஏற்பட்டு, 41 நோயாளர்களை சீனா கண்டறிந்துள்ளது என சீனா கால்நடை சுகாதார மற்றும் நோய்த்தடுப்பு மையத்தின் துணை இயக்குனர் வாங் ஸோங்லி, ழேங்சோவில் ஒரு மாநாட்டில் கூறினார்.

ஆனால், தீங்கு விளைவிக்கும் நோயை கண்டறிதல் மற்றும் தடுப்பது மிகவும் கடினம் என்று அவர் எச்சரித்தார். இது பன்றிகளுக்கு ஆபத்தானது ஆனால் மனிதர்களுக்கு தீங்கு விளைவிப்பதில்லை என்று கூறினார்.

வேகமாக பரவிவரும் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் காரணமாக பன்றிகளின் விலை அதிகரிக்கக்கூடும் என்று விவசாய அமைச்சகம் கூறியுள்ளது.

நோயால் பாதிக்கப்பட்ட பன்றிகள் இருக்கும் பண்ணைகள் மற்றும் மூன்று கிலோமீட்டர் (1.9 மைல்) பரப்பளவில் அமைந்துள்ள பண்ணைகளில் பன்றிகள் கொல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.