டெல்லி: இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள் காரணமாக அங்குள்ள தமது நாட்டினரை திரும்ப அழைக்கிறது சீனா.
கொரோனா வைரசின் பிறப்பிடம் தான் சீனா. இன்று 200க்கும் அதிகமான நாடுகளில் இந்த கொரோனா வைரஸ் பரவி உள்ளது. லட்சக்கணக்கான மக்கள் பலியாகி இருக்கின்றனர்.
அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. இந் நிலையில்  இந்தியாவில் உள்ள சீன மக்களை சொந்த நாட்டுக்கு அழைக்க சீனா முடிவு செய்துள்ளது. அதாவது மாணவர்கள், சுற்றுலாவாசிகள், வர்த்தகர்கள் என யாராக இருந்தாலும் திருப்பி அழைக்க முடிவு எடுத்து இருக்கிறது.
இது தொடர்பான அறிவிப்பு சீன தூதரக இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. யார், யார் எல்லாம் தாயகம் திரும்ப விருப்பம் உள்ளவர்களோ, அவர்கள் எல்லாரும் சிறப்பு விமானங்களில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் இந்தியா 10வது இடத்தில் இருக்கிறது. 1.40 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் பின்னணியே சீனா இப்படி ஒரு முடிவெடுக்க காரணம் என்று தெரியவந்துள்ளது.