பெய்ஜிங்: பூடான் நாட்டுடன் தனக்கு தீர்க்கப்படாத எல்லைப் பிரச்சினை உண்டென்று வெளிப்படையாக தெரிவித்துள்ளது சீனா.
கிழக்கு, மத்திய மற்றும் மேற்கு பகுதிகளில் இந்தப் பிரச்சினை நீண்டகாலமாக தொடர்கிறது என்று சீன வெளியுறவு அமைச்சகம் சார்பில் கூறப்பட்டுள்ளது. அதேசமயம், இந்தப் பிரச்சினையில் மூன்றாம் தரப்பினர் யாரும் தலையிடக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பூடான் தரப்பில் கூறப்படுவதாவது; கடந்த 1984 முதல் 2016ம் ஆண்டுவரை, சீனா- பூடான் இடையே மொத்தம் 24 சுற்றுகள் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. அதேசமயம், இந்தப் பேச்சுவார்த்தைகள், மேற்கு மற்றும் மத்தியப் பகுதிகள் தொடர்பானதாகவே இருந்துள்ளன.
இருநாடுகளின் எல்லைத் தொடர்பான பேச்சுவார்த்தைகளில், கிழக்குப் பகுதி தொடர்பான விஷயங்கள் எப்போதும் கொண்டுவரப்பட்டதில்லை. கிழக்குப் பகுதி தொடர்பான சீன அரசின் நிலைப்பாடு சட்டப்பூர்வமானது என்றால், அந்த அம்சமும், நிச்சயம் பேச்சுவார்த்தையில் கொண்டுவரப்பட்டிருக்க வேண்டும்.
பூடானுடன் கிழக்குப் பகுதியிலும் எல்லைப் பிரச்சினை உண்டு என்று சீனா கூறியிருப்பது முற்றிலும் புதிய ஒன்று. இருநாடுகளுக்கிடையிலும், மேற்கு மற்றும் மத்திய பகுதிகள் தொடர்பாக மட்டுமே கையெழுத்திடப்பட்ட கூட்ட அறிக்கைகள் உள்ளன” என்று கூறப்பட்டுள்ளது.