இவரல்லவோ டாக்டர்: நடுவானில் உயிருக்கு போராடிய முதியவரின் சிறுநீரை வாயால் உறிஞ்சி காப்பாற்றிய சீன மருத்துவர்!

பீஜிங்:

விமானத்தில் சென்ற முதியவர் ஒருவருக்கு சிறுநீர் கழியாமல், உயிருக்கு போராடிய நிலையில், அந்த விமானத்தில் பயணம் செய்தி சீன டாக்டர் ஒருவர், ஸ்ட்ரா  மூலம் அந்த பெரியவரிடன் சிறுநீரை வாயால் உறிஞ்சி எடுத்து உயிரை காப்பாற்றினார்.

சம்பவத்தன்று,  தெற்கு சீனாவின் குவாங்சோ நகரத்தில் அமெரிக்கா சென்ற விமானத்தில் ஏறிய முதியவர் ஒருவருக்கு விமானம் பறந்துகொண்டிருந்தபோது உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதுகுறித்து விமானத்தில் இருந்த மருத்துவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அந்த விமானத்தில் பயணம் செய்த மருத்து வர்கள் ஜாங்ஹாங் மற்றும் ஜாங்க்சியாங் ஆகியோர் முதியவரின் உடல்நிலையைப் பரிசோதித்தனர். அப்போது, அந்த முதியவர், சிறுநீர் கழிக்க முடியாமல், அவரது வயிறு வீங்கி அவதிப்பட்டு வந்தது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து, அவருக்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்த மருத்துவர்கள், விமானத்தில் கிடைத்த ஆக்ஸிஜன் மாஸ்க், சிரிஞ்ச் மற்றும் ஸ்ட்ரா ஆகியவற்றைக் கொண்டு சிறுநீரை வெளியேற்றும் வகையில் ஒரு அவசர செட்டப்பை ஏற்படுத்தி, சிறுநீரை வெளியேற்ற முயற்சி செய்தனர்.

ஆனால், அந்த முயற்சி வெற்றிபெறாத நிலையில்,  மருத்துவர் ஜாங்ஹாங் அதிரடியாக,  நோயாளிக்குப் பொருத்தப்பட்டிருந்த குழாயின் மூலம் தானே சிறுநீரை உறிஞ்சி வெளியேற்றத் தொடங்கினார்.  அதன்படி, சுமார் 37 நிமிடங்கள், அவர் தொடர்ந்து ஏறக்குறைய 800 மில்லி சிறுநீரை தனது வாயால் உறிஞ்சி வெளியேற்றினார். இதனால், அந்த முதியவர் உயிர் பிழைத்தார்.

சீன மருத்துவர் ஜாங்ஹாங்கின் இந்த செயல் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த புகைப்படம் சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உலகம் முழுவதும் ஜாங்ஹாங்கின் செயலுக்கு புகழாரம் சூட்டப்பட்டு வருகிறது. பாராட்டுகள் குவிந்து வருகின்றன…