கொரோனா தாக்கம் – பாகிஸ்தானுக்கு உதவிக்கரம் நீட்டிய சீனா!

இஸ்லாமாபாத்: கொரோனா வைரஸ் தாக்கத்தால் திணறும் பாகிஸ்தான் நாட்டிற்கு உதவும் வகையில், மருத்துவ உபகரணங்களை வழங்கியுள்ளதாக சீனா சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் பாகிஸ்தானில் 1526 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 13பேர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா சிகிச்சை பெறுவோருக்கு மருத்துவ சாதனங்களை அளிப்பதற்காக, மார்ச்-27ம் தேதி பாகிஸ்தான் எல்லையை திறக்குமாறு சீனா கேட்டுக்கொண்டது.

அதன்படி ஒரு ட்ரக்கில் 5 வென்டிலேட்டர்கள், 2000 பாதுகாப்பு உபகரணங்கள், 20,000 முககவசங்கள், மற்றும் 24,000 நியூக்ளிக் அமில சோதனை பொருட்கள் உள்ளிட்டவற்றை, குன்ஜெராப் பாஸ் வழியாக பாகிஸ்தானுக்குள் அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும், அந்நாட்டிற்கு மருத்துவ வல்லுநர் குழு ஒன்றையும் சீன மருத்துவ ஆணையம் அனுப்பி வைத்துள்ளது. சீனாவும் பாகிஸ்தானும் நெருங்கிய நட்பு நாடுகள் என்பதும், இந்தியாவிற்கு எதிரான வியூகக் கூட்டாளிகள் என்பதும் நாம் அறிந்ததே.

இதற்கு முன்பாக, 3 லட்சம் மருத்துவ முகக் கவசங்களை பாகிஸ்தான் உள்ளிட்ட 8 நாடுகளுக்கு வழங்கியதாக சீன சர்வதேச வானொலி தெரிவித்தது.