நியூயார்க்:

மசூத் அஜாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கும் தீர்மானத்துக்கு ஏப்ரல் 23-க்கும் ஆதரவு தர வேண்டும் என, சீனாவுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் இலக்கு நிர்ணயித்துள்ளன.


ஜெய்ஸ்-இ-முகமது தீவிரவாத இயக்கத் தலைவர் மசூத் அஜாரை தடை செய்யப்பட்ட தீவிரவாதியாக அறிவிக்கக் கோரும் தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலுக்கு அமெரிக்கா முதல்முறை அனுப்பியது.

அதன்பின்னர் மசூத் அஜாரை தீவிரவாதியாக அறிவிக்க, இந்தியாவும் தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறது.
அண்மையில் நடந்த பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் அமெரிக்கா, இங்கிலாந்துடன் இணைந்து, இது தொடர்பான தீர்மானத்தை பிரான்ஸ் கொண்டு வந்தது.

ஆனால் இது குறித்து பரிசீலிக்க கூடுதல் அவகாசம் கோரியது சீனா. இதனால் மசூத் அஜாரை சர்வதேச குற்றவாளியாக அறிவிக்க முடியாத சூழல் ஏற்பட்டது.

2009-ம் ஆண்டு மசூத் அஜாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கக் கோரும் தீர்மானத்தை இந்தியா முன்மொழிந்தது. அதற்கு சீனாவின் ஆதரவு கிடைக்கவில்லை.

அதன்பிறகு 2 முறை கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கும் சீனா ஆதரவு தரவில்லை.

இந்நிலையில், மஜீத் அஜாருக்கு எதிரான தீர்மானத்துக்கு ஏப்ரல் 23-ம் தேதிக்குள் ஆதரவு தராவிட்டால், தீர்மானம் கொண்டு வர விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடத்துவோம் என அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள் எச்சரித்துள்ளன.

இதற்கு பதில் அளித்துள்ள சீனா, 3 நாடுகளும் அவ்வாறு நடந்து கொண்டால், தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும் என்று கூறியுள்ளது.

மசூத் அஜார் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டால், அவர் எந்த நாட்டுக்கும் பயணம் செய்யமுடியாது. அவரது சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.