இஸ்லாமியர்களை பன்றிக்கறி உண்ண வற்புறுத்தும் சீன அரசு

பிஜிங்

சீன அரசு தனது நாட்டில் உள்ள இஸ்லாமியர்களை பன்றிக்கறி உண்ணுவதன் மூலம் விசுவாசத்தை நிரூபிக்க வற்புறுத்தி உள்ளது.

சீனாவை ஆளும் கம்யூனிஸ்ட் அரசுக்கு அனைத்து மதத்தின் மீதும் ஒரு சந்தேகம் இருந்து வருகிறது. மதக் கோட்பாடுகள் மூலம் மக்கள் கம்யூனிசத்துக்கு எதிராக மாறக்கூடும் என்னும் ஐயத்தில் அரசு மத நம்பிக்கைகளுக்கு மதிப்பு அளிப்பதில்லை.

சீனாவில் உய்கர் பகுதியில் சிறுபான்மையினரான இஸ்லாமியர்கள் வசித்து வருகின்றனர். இஸ்லாமிய நம்பிக்கைப்படி அவர்கள் பன்றிக் கறியை உண்ணுவதில்லை. மேலும் குரானில் அவ்வாறு கூறப்பட்டிருப்பதாகவும் இஸ்லாமியர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இதனால் அவர்கள் மீது மேலும் சந்தேகம் கொண்ட சீன அரசு அவர்களை தீவிரமாக கண்காணித்து வருகிறது. இதனால் அரசுக்கு எதிராக உள்ளதாக கருதப்படும் சில உய்கர் இஸ்லாமியர்களை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றுள்ளது.

அவர்கள் சீன அரசுக்கு விசுவாசமானவர்கள் என்பதை நிரூபிக்க குரானை பின்பற்ற மாட்டோம் எனக் கூறவும் பன்றிக்கறியை உண்ண வேண்டும் எனவும் வற்புறுத்தி உள்ளது. இந்த நிகழ்வு சீனாவில் வசிக்கும் சுமார் 1.1 கோடி இஸ்லாமியர்களுக்கு கடும் அதிருப்தியை உண்டாக்கி இருக்கிறது.